பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் – ஆளுநருடன் சென்னை காவல் ஆணையர் சந்திப்பு!

ஆளுநர் மாளிகை முன்பு நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று சந்தித்தார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவு…

ஆளுநர் மாளிகை முன்பு நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று சந்தித்தார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவு வாயில் முன்பு நேற்று பிற்பகல் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பெட்ரோல் குண்டு வீசிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்றவரை பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் மடக்கி பிடித்தனர்.  அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நபர் பிரபல ரவுடி கருக்கா வினோத் என்பது தெரிய வந்தது.  அவரிடமிருந்து மேலும் 3 பெட்ரோல் குண்டுகளை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் தீர்மானத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காததால்,  ஆளுநர் மாளிகை மீது குண்டு வீசியதாக கருக்கா வினோத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியானது.  பின்னர் கருக்கா வினோத் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆளுநர் மாளிகை சார்பில் காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.  இதையடுத்து ஆளுநர் மாளிகைக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.  தொடர்ந்து குண்டுவீச்சு சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை பெருநகர காவல் இணை ஆணையர் எம்.ஆர்.சிபி சக்கரவர்த்தி,  துணை ஆணையர் ஆர்.பொன் கார்த்திக்குமார் ஆகியோர் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து விளக்கம் அளித்திருந்தனர்.

இதையும் படியுங்கள் : இந்திய – அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு உயரிய விருது..! – அதிபர் ஜோ பைடன் பாராட்டு

இந்நிலையில்,  சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து விளக்கம் அளித்தார்.  சுமார் 40 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விளக்கம் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.