லியோ பார்த்திபன் லுக்கில் எடிட் செய்யப்பட்ட தனது புகைப்படத்தை ஷேர் செய்து நடிகர் பார்த்திபன் பதிவிட்டு இருக்கும் ட்வீட் விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இந்தாண்டின் கோலிவுட் சினிமாவின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக்க இருந்த ‘லியோ’ படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ரிலீசான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது. இதனால் படக்குழுவினர் உச்சகட்ட மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
இந்நிலையில் ‘லியோ’ படம் தொடர்பாக விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக ‘லியோ’ படம் வெளியான சமயத்தில் இயக்குநர் ரத்னகுமார் பார்த்திபன் என லியோ விஜய்யின் கதாபாத்திர பெயரை குறிப்பிட்டு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார். அவரின் இந்த பதிவை இணையவாசி ஒருவர் ஷேர் செய்து உங்களது பெயர் பேமஸ் ஆகிவிட்டது என பார்த்திபனை டேக் செய்து பதிவிட்டிருந்தார். அதற்கு பார்த்திபன், ‘லோகேஷ் கனகராஜ் – விஜய் படத்தில் பெயர் அளவிலாவது இடம்பெற்றது மகிழ்ச்சி’ என பதிலளித்திருந்தார். அவரின் இந்த பதிவு விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் இணையவாசிகள் பலரையும் கவர்ந்தது.
இந்நிலையில் ‘லியோ’ பட விஜய்யின் போஸ்டர் ஒன்றில் பார்த்திபன் முகம் இருப்பதை போன்று எடிட் செய்து குறும்பு செய்துள்ளனர் இணையவாசிகள். இதனை பார்த்த பார்த்திபன் தனது எக்ஸ் தளத்தில் ஷேர் செய்து, விஜய் ரசிகர்களே மன்னிக்க! இப்படியெல்லாம் செய்ய முடியுமான்னு ஆச்சர்யமா இருக்கு! என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.







