ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிய பயணிகள் மீட்பு!

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி தவித்த 957 பயணிகள், பேருந்து மற்றும் சரக்கு வாகனம் மூலம் வாஞ்சி மணியாட்சிக்கு அழைத்து வரப்பட்டு சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குமரிக் கடல் மற்றும்…

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி தவித்த 957 பயணிகள், பேருந்து மற்றும் சரக்கு வாகனம் மூலம் வாஞ்சி மணியாட்சிக்கு அழைத்து வரப்பட்டு சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.  இதனால் திருநெல்வேலி,  தூத்துக்குடி,  தென்காசி,  கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை அடுத்து தாதன்குளம் அருகே கனமழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு தண்டவாளத்தின் கீழ் இருந்த தரைப்பகுதி முழுவதுமாக அடித்து செல்லப்பட்டது. இதனால் தண்டவாளம் எந்தவிதமான பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் தொங்கியது. இதனால், டிசம்பர் 17- ஆம் தேதி திருச்செந்தூரிலிருந்து சென்னை நோக்கி சென்ற ரயில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதனால் 500க்கும் மேற்பட்ட மக்கள் அங்கு சிக்கி தவித்தனர்.

இந்நிலையில், ஸ்ரீ வைகுண்டம் ரயில் நிலையத்தில் மீட்புப் பணிகள் விரைவில் தொடங்கும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் தகவல் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து, ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிய 957 பயணிகள் பத்து பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனம் மூலம் வாஞ்சி மணியாட்சிக்கு ரயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். பின் அங்கிருந்து நேற்று டிச.19 இரவு 11 மணியளவில் சிறப்பு ரயில் மூலம் 957 பயணிகளும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.