வடிய தொடங்கிய வெள்ளம் | சீரான நெல்லை ரயில் போக்குவரத்து!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் இன்று (டிச.20) ரயில்கள் இயக்கப்பட உள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  குமரிக்கடல் பகுதியில் நிலவியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தென் தமிழகத்தின் 4…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் இன்று (டிச.20) ரயில்கள் இயக்கப்பட உள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

குமரிக்கடல் பகுதியில் நிலவியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தென் தமிழகத்தின் 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது.இடைவிடாது பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு பகுதிகள் தனித் தீவுகளாகவே மாறியுள்ளன. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் வீடுகளைவிட்டு வெளியேற முடியாமலும், உணவு கிடைக்காமலும் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகினர்.

இதில், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலைய தண்டவாளம் மற்றும் நடைமேடை மழை வெள்ளத்தில் மூழ்கியது. அதேபோல், திருநெல்வேலி சந்திப்பு – தாழையூத்து இடையே தண்டவாளத்தில் கீழ் உள்ள ஜல்லி கற்களை மழை வெள்ளம் அடித்து சென்றது. ஸ்ரீவைகுண்டம் பகுதியிலுள்ள தண்டவாளம் கீழ்ப்பகுதி ஜல்லி மற்றும் மண் அரித்து செல்லப்பட்டது.

மழை ஓய்ந்ததையடுத்து சீரமைப்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் தேங்கிய மழைநீா் மோட்டாா் மூலம் வெளியேற்றப்பட்டது. செவ்வாய்க்கிழமை இரவு ரயில் நிலையத்தில் தண்ணீா் முற்றிலும் அகற்றப்பட்டது.

இதை தொடர்ந்து,  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டு மூன்று நாட்களுக்கு பிறகு இன்று (டிச.20) ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.