புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரம் சுற்றியுள்ள கிராமங்களில் அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் தெரிவித்தன. மேல் ஏறி, நெல்வாய், நாகப்பட்டு, பரந்தூர் உள்ளிட்ட 13 கிராமங்களில் விமான நிலையம் அமைக்கப்படும் என தெரிய வருகிறது. இதில் முக்கியமாக ஏகனாபுரம் ,நெல்வாய், மேல் ஏறி, நாகப்பட்டு உள்ள குடியிருப்புகள் அகற்றப்படும் எனவும் மற்ற கிராமங்களில் விவசாய நிலங்களும், நீர்நிலைகளும் எடுக்கப்படுவதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் காஞ்சிபுரத்தில் தொழில்துறை அமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. இது குறித்து நேற்று தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு புதிய விமான நிலையம் அமைப்பது தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு ,தொழில் துறை வளர்ச்சிக்கும் மிகவும் உகந்தது எனவும் கிராமங்களில் எடுக்கப்படும் நிலங்களுக்கு அதிகமான இழப்பீடு வழங்கப்படும் என பேட்டி அளித்திருந்தார்.
இந்நிலையில் இன்று ஏகநாபுரம் கிராமத்தில் அம்பேத்கர் சிலை அருகே சிறுவர், சிறுமிகள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி தங்கள் குடியிருப்பு பகுதியில் விமான நிலையம் அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். மக்கள் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் ஈடுபட்டதால் காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கிராம மக்களிடம் நாம் பேசும்பொழுது எங்களுக்கு விமான நிலையம் வேண்டாம். விவசாயத்தை அழித்துவிட்டு விமான நிலையம் எதற்கு, ஏர் முனையை உடைத்து விட்டு ஏர்போர்ட் எதற்கு என கேள்வி எழுப்பினர். பின்னர் ஆர்ப்பாட்டம் முடிந்து பொதுமக்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.







