ஆங்கிலேயருக்கு மன்னிப்பு கடிதம் எழுதிய சாவர்க்கர் பெயரை அகற்றக்கோரி புதுச்சேரியில் பல்வேறு சமூக அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாட்டின் 75வது சுந்தந்திரதினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் சுதந்திரப்போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் தியாகப் பெருஞ்சுவர் அமைத்து அதில் தியாகிகள் பெயர் பொருத்தப்பட்டு வருகிறது. இதில் வீர சாவர்கரின் பெயரை சமீபத்தில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பொருத்தினார். இந்த விவகாரம் புதுச்சேரியில் சமூக அமைப்பினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு, ஆர்ப்பாட்டம் போராட்டத்தில் ஈடுபடவைத்துள்ளது.
இந்திய விடுதலைப்போரட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதி கொடுத்து, ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட சாவர்க்கர் பெயரை தியாகப் பெருஞ்சுவரில் இருந்து அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும், இது தொடர்பாக நடைபெற்ற போராட்டங்களில் ஈடுபட்ட சமூக ஆர்வலர்கள் மீது அரசால் போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தியும் பல்வேறு சமூக மற்றும் தமிழ் அமைப்புகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் அண்ணா சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
புதுச்சேரிக்கும் சாவர்க்கருக்கும் என்ன தொடர்பு?
இந்திய விடுதலை போராட்டத்தின்போது, ஆங்கிலேய அரசுக்கு மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துவிட்டு, அவர்களுக்கு ஆதரவாகவும், சுதந்திர போராட்டத்திற்கு எதிராகவும் இருந்துள்ள சாவர்கர் புதுச்சேரி விடுதலைக்கு துளியும் தொடர்பில்லாதவர் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் பிரஞ்சு ஆதிக்கத்திற்கு எதிராக புதுச்சேரியில் நடந்த விடுதலை போராட்டத்தை பற்றி சாவர்கருக்கு தெரியுமா? என்று கூட தெரியாது என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
– இரா.நம்பிராஜன்









