பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படுவதற்கு நிலம் வழங்குபவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பு வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதியளித்துள்ளார்.
சென்னைக்கு மற்றொரு விமான நிலையம் வருவது குறித்து நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சென்னைக்கு பன்னாட்டு விமான முனையம் தேவை என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில், தற்போது பிரம்மாண்ட வசதிகளுடனான விமான நிலையம் தேவை என்ற கனவு நிறைவேறியிருக்கிறது என்றார்.
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும், புரட்சிக்கும் புதிய விமான நிலையம் வழிவகுக்கும். சர்வதேச முக்கியத்துவம் பெறும் வகையான விமான நிலையமாக இருக்கும். ஆனால் நிலம் கையெடுப்பு உள்ளிட்ட பல சவால்களை சந்திக்க வேண்டி வரும். அதே நேரத்தில் எதிர்கால வளர்ச்சியையும் கருத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
நிலத்தை வாழ்வாதாரமாக கொண்டவர்கள் பாதித்துவிடாமல் நடவடிக்கை எடுத்து உரிய இழப்பீடுகளை வழங்கி, பாதுகாப்புகளை வழங்கி நிலம் கையகப்படுத்தப்படும் என அமைச்சர் உறுதியளித்தார். வரலாறுகளை தேடும் முன்னோட்டமாக தொல்லியல் துறையினர் கேரளாவின் பட்டணம், ஒடிசாவின் நகரங்களுக்கும் சென்று வந்துள்ளனர்.
தொல்லியல் துறையினர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அரசாங்கங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தி தடம் தேடி பயணம் மற்றும் கொற்கை பகுதியில் பல ஆய்வுகளை மேற்கொண்ட பிறகு கடல் ஆய்வுப்பணிகள் மிக விரைவில் தொடங்கும் என்றார். மேலும் புதிய கண்டுபிடிப்புகள், கொள்கைகள், தரவுகள், சொல்லக்கூடிய செய்திகள், அறிவியல்பூர்வமான செய்திகள் பாடத்திட்டங்களில் இடம்பெறுவது சிறப்பாக இருக்கும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்








