பரமக்குடி ஸ்ரீமுத்தாலம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பால்குட பெருவிழாவில் 10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினர்.
பரமக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஶ்ரீமுத்தாலபரமேஸ்வரி அம்பாள் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த மார்ச் மாதம் 28ம் – தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில் 11 நாட்கள் விரதமிருந்து அக்னிச்சட்டி மற்றும் தேரோட்டம் போன்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அதனையொட்டி பங்குனி உத்திரத்தில் 10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு இன்று அதிகாலை 4 மணி முதல் 12 மணி வரை பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மேலும் வைகை ஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட மண்டகபடியில் இருந்து துவங்கிய பால்குட ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்து கோவிலை வந்தடைந்தது. .பின் பக்தர்கள் சுமந்து வந்த பால் மூலம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.
இவ்விழாவில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தாிசனம் செய்ததால் 500க்கும் மேற்பட்ட போலீசார்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
—-௧ா.ரூபி







