பருவமழையால் பள்ளிகளில் பழுதடைந்த கட்டடங்களை இடிக்க உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
திருவையாறு தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான, கல்லணை புதிய பாலம் வழியாக, போக்குவரத்து புதிய வழித்தடங்களை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார். மற்றும் திருவையாறு புறவழிச் சாலை திட்டப்பணிகளையும் அவர் தொடங்கி வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், திருக்காட்டுப்பள்ளியில் இருந்து கல்லணை வழியாக திருச்சிக்கு போக்குவரத்து வழிதடங்களை திறந்து வைப்பதன் மூலம் திருக்காட்டுப்பள்ளி, பூண்டி, கோவிலடி, கிராம பொதுமக்கள் புதிதாக நகர பேருந்து வசதி பெறுகின்றார் என்றார். இதன் மூலம் இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை இந்த அரசு நிறைவேற்றியுள்ளது என தெரிவித்தார்.
மேலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் பள்ளிகளில் பழுதடைந்து உள்ள கட்டிடங்களை இடிக்க உத்தரவிட்டுள்ளதாகவும், மேலும் பள்ளி வளாகத்தில் பாதுகாப்பற்ற முறையில் உள்ள இடங்களுக்கு மாணவர்களை அனுமதிக்க வேண்டாம் என உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.








