தமிழ்நாட்டிற்கு ‘ஆரஞ்சு’ அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் 11, 12-ம் தேதிகளில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாகி உள்ளதாக…

தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் 11, 12-ம் தேதிகளில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய கூடும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் புயலுக்கு எந்த வாய்ப்பும் இல்லை.

மேலும் 11,12 ஆம் தேதிகளில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தென் தமிழக கடலோரப்பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீச வாய்ப்பு இருப்பதால் 12 ஆம் தேதி வரை மீனவர்கள் இந்த பகுதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் கே.பாலசந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.

இதனிடையே, நாளை முதல் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை இருக்கும் என்றும் வரும் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் தமிழகத்திற்கு கனமழை முதல் மிக கனமழைக்காண வாய்ப்பு இருப்பதால், ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் ,திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி 15 உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கும் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 12 ஆம் தேதி நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ,விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கும் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளுக்கும் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.