தமிழ்நாட்டில் கடந்த 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த பட்டியலில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில் 66 லட்சம் பேர் இடம் மாறி சென்றவர்களாக காட்டப்பட்டுள்ளனர். இதனிடையே வாக்காளராக சேர்வதற்கு ஒரு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இடமாறி சென்ற வாக்காளர்கள், அ
ந்த இடத்திற்கான வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் படிவம் எண் 6ஐ அளித்து தங்களை வாக்காளராக மீண்டும் சேர்த்துக் கொள்வதற்கு முடியும். இந்தப் படிவங்களை வாங்கும் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டுள்ள நிலயில் அவர்களுக்கு அரசியல் கட்சிகளின் தேர்தல் முகவர்கள் உதவி புரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் திமுகவிற்கு 65 ஆயிரத்து 210, அதிமுகவிற்கு 63 ஆயிரத்து 703, பாஜகவிற்கு 54 ஆயிரத்து 258, காங்கிரசிற்கு 27 ஆயிரத்து 158 தேர்தல் முகவர்கள் உள்ளனர். அரசியல் கட்சிகளின் தேர்தல் முகவர்கள் சம்பந்தப்பட்ட வாக்காளர்களிடம் சென்று அவர்களிடம் ஆறு படிவத்தை பூர்த்தி செய்து வாங்கி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் சமர்ப்பித்து வருகின்றனர்.
அந்த வகையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின் இதுவரை 39 ஆயிரத்து 821 படிவங்கள் பெயர் சேர்ப்புக்காகவும், 413 படிவங்கள் பெயர் நீக்கத்திற்காகவும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார்.







