32.5 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா கட்டுரைகள் செய்திகள்

10% இடஒதுக்கீடும்…அரசியல் சாசன அடிப்படை கட்டமைப்பும்…


எஸ்.இலட்சுமணன்

கட்டுரையாளர்

பொருளாதாரத்தில் நலிவடைந்த முற்பட்ட வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது செல்லும் என நவம்பர் 7ந்தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு நாடெங்கிலும் பேசு பொருளாகியுள்ளது. இந்த வழக்கில் முக்கியமாக சுட்டிக்காட்டப்பட்ட அரசியல் சாசன அடிப்படை கட்டமைப்பு குறித்து இந்த கட்டுரையில் பார்ப்போம். 

முற்பட்ட வகுப்பினரில் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில்,    தலைமை நீதிபதி யூ.யூ லலித்,  மற்றும் நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, பீலா எம்.திரிவேதி,  எஸ்.ரவீந்திரபட்,  ஜே.பி. பர்திவாலா  ஆகியோரை உள்ளடக்கிய அரசியல் சாசன அமர்வு 4 விதமான தீர்ப்புக்களை வழங்கியது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பீலா எம்.திரிவேதி, ஜே.பி.பர்திவாலா ஆகியோர் தனித் தனியாக அளித்த தீர்ப்புகள் 10% இடஒதுக்கீடு செல்லும் என கூறியது.  நீதிபதி எஸ்.ரவீந்திர பட் 10% இடஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு முரணானது என தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பே தமது தீர்ப்பு என தலைமை நீதிபதி யூயூலலித் கூறினார். இதையடுத்து பொருளாதாரத்தில் நலிவடைந்த முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட 103வது அரசியல் சாசன சட்டத் திருத்தம் செல்லும் என்பது 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் வழங்கிய பெரும்பான்மை தீர்ப்பின் அடிப்படையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பு

10% இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களில் மனுதாரர்கள் முக்கியமாக சுட்டிக்காட்டியது, இந்த சட்டம் அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பை தகர்க்கிறது என்பதுதான். நீதிபதிகள் தங்கள் தீர்ப்புகளை வழங்கும்போதும் இந்தச்  சட்டம் அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்புகளை தகர்க்கிறதா? இல்லையா? என்கிற கேள்வியை முக்கியமாக முன்னிறுத்தியே வழக்கை விசாரித்து அந்த கேள்விக்கு பதில் சொல்லும் விதமாக தங்கள் தீர்ப்புகளை வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பு என்றால் என்ன?…அரசியல் சாசன சட்டத்திருத்தம் கொண்டு வருவதற்கான நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை அது எப்படி கட்டுப்படுத்துகிறது என்பதை பார்ப்போம்.

அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்புகள் என்று தனியாக வரையறைகள் அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்படவில்லை. அதே நேரம் இந்த வரையறைகள் காலப்போக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் வாயிலாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான அதிகாரத்தை நாடாளுமன்றத்திற்கு சட்டப்பிரிவு 368 வழங்கியுள்ளது. எனினும் இந்த அதிகாரம் எதுவரை செல்லுபடியாகும் என்பதற்கு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் பல்வேறு காலகட்டங்களில் வரையறைகளை நிர்ணயித்தன.

1951ம் ஆண்டு  ஷங்கரி பிரசாத் வழக்கிலும், 1965ம் ஆண்டு ஷாஜ்ஜன் சிங் வழக்கிலும் அடிப்படை உரிமைகள் உள்பட அரசியல் சாசனத்தின் எந்த ஒரு சட்டத்தையும் திருத்துவதற்கு நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் 1967ம் ஆண்டு  கோலக்நாத் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவு இதற்கு மாறாக அமைந்தது. இந்த வழக்கில் அரசியல் சாசன சட்டப்பிரிவு 13ல் கூறப்பட்டுள்ள அம்சங்களை சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம்,  அடிப்படை உரிமைகள் சார்ந்த சட்டங்களை திருத்துவதற்கு நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என  தனது தீர்ப்பில் கூறியது.  அப்படி அடிப்படை உரிமைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றால் புதிதாக அரசியல் சாசன நிர்ணய சபையைத்தான் உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியது.

கேசவானந்த பாரதி வழக்கு

1973ம் ஆண்டு கேசவானந்த பாரதி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பு என்றால் என்ன என்பதை  வரையறை செய்வதில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது. இந்திய நீதித்துறை வரலாற்றில் 13 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அம்ர்வு விசாரித்த ஒரே வழக்காக தற்போது வரை இந்த வழக்கு திகழ்கிறது, கேரளா அரசின் நிலச் சீர்திருத்த சட்டத்தைப் பயன்படுத்தி அம்மாநிலத்தில் உள்ள எட்நீர் மடத்தின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதற்கு எதிராக  மடாதிபதி கேசவானந்த பாரதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  நீண்ட விசாரணைக்கு பின்னர் 24 ஏப்ரல் 1973ம் ஆண்டு இந்த வழக்கில் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. 7க்கு 6 என்கிற பெரும்பான்மை அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பு  மடாதிபதி கேசவானந்த பாரதிக்கு சாதகமாக அமைந்தது. அரசியல் சாசனத்தின் எந்த ஒரு சட்டத்தையும் திருத்துவதற்கு நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இருந்தாலும் அந்த அதிகாரம் அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கட்டமைப்பை மீறக்கூடாது என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு கூறியது. அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்புகளாக

1.அரசியல் சாசனத்தின் முதன்மை நிலை, 

2.இந்தியாவின் ஒற்றுமை மற்றும் இறையாண்மை,

3. அரசின் ஜனநாயகம் மற்றும் குடியரசு வடிவம்,

4. அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள கூட்டாட்சி கோட்பாடு,

5. அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மை கோட்பாடு,

6. அதிகார பரவல்,

7. குடிமக்களின் தனிப்பட்ட சுதந்திரம் ஆகியவற்றை அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பை குறிக்கும் அளவீடுகளாக  கேசவானந்த பாரதி வழக்கில் உச்சநீதிமன்றம் நிர்ணயம் செய்தது. நாடாளுமன்றம் அரசியல் சாசனத்தை திருத்தலாம் ஆனால் அதனை மாற்றி எழுதக்கூடாது என்பதையும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் உறுதிப்படுத்தியது.  அடிப்படை கட்டமைப்புகளை மீறி நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டத்திருத்தங்களை ரத்து செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்பதையும்  கேசவானந்த பாரதி வழக்கில் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியது. பின்னாளில் பலவேறு தருணங்களில் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டதிருத்தங்கள் உச்சநீதிமன்றத்தால் இந்த தீர்ப்பை மேற்கோள்காட்டி ரத்து செய்யப்பட்டுள்ளன.இந்திரா காந்தி அரசு கொண்டுவந்த சட்ட திருத்தம் 

1975ம் ஆண்டு நெருக்கடி நிலை காலகட்டத்தில் இந்திரா காந்தி அரசால் கொண்டு வரப்பட்ட 39வது அரசியல் சாசன சட்டத்திருத்தம்,  அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பை மீறியதாக கூறி உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. அரசு எந்திரத்தை தவறாக பயன்படுத்தி தேர்தலில் ஜெயித்ததாக அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு எதிராக தொடர்ப்பட்ட வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி வெற்றி பெற்றது செல்லாது என தீர்ப்பளித்தது. இதனால் அவரது பிரதமர் பதவி பறிபோகவிருந்த சூழ்நிலையில் நாட்டில் நெருக்கடி நிலையை பிறப்பித்தார் இந்திராகாந்தி. அந்த நெருக்கடி நிலை காலகட்டத்திலும் முக்கியமான ஒரு அரசியல் சாசன சட்டத்திருத்தமும் கொண்டு வரப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.  குடியரசுத் தலைவர், குடியரசு துணை தலைவர், பிரதமர், மக்களவை சபாநாயகர் ஆகிய பதவிகளுக்கான தேர்வுகள் நீதிமன்ற விசாரணைக்கு அப்பாற்பட்டது என 329வது சட்டப்பிரிவில் இந்திராகாந்தி அரசு ஒரு திருத்தம் கொண்டு வந்தது. ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த ராஜ் நரேன், இந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்திரா காந்தி அரசு கொண்டு வந்த அரசியல் சாசன சட்டத்திருத்தம் அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பை தகர்ப்பதாகக் கூறி அந்த சட்டத்திருத்தம் செல்லாது என இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஓபிசி இடஒதுக்கீட்டை உறுதிபடுத்திய தீர்ப்பு

இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு விவகாரத்தில் ஒரு மைல்கல் தீர்ப்பு ஒன்றை கடந்த 1992ம் ஆண்டு நவம்பர் மாதம் 16ந்தேதி  9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வழங்கியது. மண்டல் கமிஷ்ன் பரிந்துரைகளின் அடிப்படையில் இதரபிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு பணிகளில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இந்திரா சாக்னி மற்றும் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இடஒதுக்கீட்டை மேலும் நீட்டிப்பது அனைவருக்கும் சமவாய்ப்பு என்கிற அரசியல் சாசனத்தின் உத்தரவாதத்தை மீறுவதாக அமையும், பிற்படுத்தநிலையை கண்டறிவதற்கு ஜாதி ஒரு நம்பகத்தகுந்த காரணியல்ல என்பது உள்ளிட்ட வாதங்களை மனுதாரர்கள் உச்சநீதிமன்றத்தில் முன்வைத்தனர். நீண்ட விசாரணைக்கு பின்பு 9 நீதிபதிகள் கொண்டு அரசியல் சாசன அமர்வு 6க்கு 3 என்கிற பெரும்பான்மை அடிப்படையில் தனது உத்தரவை வழங்கியது.   அதன்படி

1. சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ளவர்களை பொருளாதார அடிப்படையில் தீர்மானிக்க முடியாது, இதனை தீர்மானிப்பதில் ஜாதி அமைப்பு கருத்தில்கொள்ளப்பட வேண்டும்.

2. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என பிரிக்கலாம்.

3. பிற்படுத்தப்பட்டவர்களில் குறிப்பிட்ட வரம்பிற்கு அதிகம் வருமானம் பெறும் கிரிமிலேயர் பிரிவினரை இடஒதுக்கீட்டிலிருந்து நீக்க வேண்டும்.

4.இடஒதுக்கீட்டின் மொத்த அளவு 50% சதவீதத்தை தாண்டக்கூடாது.

5. பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு கடைபிடிக்கப்படக்கூடாது  என்பது உள்ளிட்ட முக்கிய உத்தரவுகளை இந்திரா சாக்னி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியது. இடஒதுக்கீடு தொடர்பாக அப்போது நிலவி வந்த பல்வேறு சர்ச்சைகளுக்கு இந்த தீர்ப்பு முற்றுப்புள்ளி வைத்தது.

இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் 103வது அரசியல் சாசன சட்டத் திருத்தத்தை மத்திய பாஜக அரசு கொண்டுவந்தது.

103வது அரசியல் சாசன சட்டத் திருத்தம் கூறுவது என்ன?

1.சமயம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறப்பிடத்தை சுட்டிக்காட்டி பாகுபாடு காட்டுவதற்கு தடைவிதிக்கும் அரசியல் சாசனத்தின் 15வது பிரிவில்  6வதாக ஒரு உட்பிரிவு சேர்க்கப்பட்டது.  எஸ்.டி., எஸ்.சி.,  ஓ.பி.சி பிரிவுகளில் உள்ள சமூகத்தினரை தவிர பிற பிரிவுகளைச் சேர்ந்தவர்களில்  பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு  சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தவிர மற்ற அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில்  அதிகபட்சம் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவதற்கு,  சட்டபிரிவு 15ல் உள்ள விதிகள் மற்றும் சட்டப்பிரிவு 19ல் உள்ள தொழில் சுதந்திரத்தை குறிக்கு விதி மற்றும் கல்வி உரிமை தொடர்பான சட்டப்பிரிவு 29ன் 2வது உட்பிரிவில் கூறப்பட்ட விதி ஆகிய எதுவும் தடை ஏற்படுத்தாது என்று   15வது சட்டப்பிரிவின் 6வது உட்பிரிவில் வாக்கியம் சேர்க்கப்பட்டது.

2. இதே போல்  அரசு வேலைவாய்ப்புகளில் சமன்மையான வாய்ப்பு நலன்களை வலியுறுத்தும் 16வது சட்டப்பிரிவிலும் 6வதாக ஒரு உட்பிரிவு சேர்க்கப்பட்டது. எஸ்.டி.எஸ்.சி, மற்றும் ஓ.பி.சி பிரிவினரை தவிர மற்ற பிரிவுகளில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வேலைவாய்ப்புகளில் அரசு அதிகபட்சம் 10 சதவீத வரை இடஒதுக்கீடு வழங்குதற்கு  16வது பிரிவில் உள்ள மற்ற விதிகள் எதுவும் தடை ஏற்படுத்தாது என்ற வாக்கியம் அந்த 6வது உட்பிரிவில் சேர்க்கப்பட்டது. 

இப்படி கொண்ட வரப்பட்ட அரசியல் சாசன சட்டத்திருத்தத்தின் அடிப்படையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்தான் நவம்பர் 7ந்தேதி 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தனது தீர்ப்பை வழங்கியுள்ளது. 103வது அரசியல் சாசன சட்டத் திருத்தம் இந்திய அரசியல் சாசன சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புகளை தகர்க்கிறது எனகூறி 10சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டநிலையில், இந்த சட்டத் திருத்தம் அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிராக அமையவில்லை என 3 நீதிபதிகளும், அடிப்படை கட்டமைப்பை தகர்க்கிறது என 2 நீதிபதிகளும் தீர்ப்பளித்துள்ளனர். இதையடுத்து 3க்கு 2 என்கிற பெரும்பான்மை தீர்ப்பின் அடிப்படையில், பொருளாதாரத்தில்  நலிவடைந்த முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லத்தக்கதாகியுள்ளது.

நீதிபதிகள் உத்தரவில் தெரிவிக்கப்பட்டது என்ன?

10% சதவீத இடஒதுக்கீடுக்கு ஆதரவாக தீர்ப்பளித்த 3 நீதிபதிகளில் ஒருவரான தினேஷ் மகேஸ்வரி, ”இடஒதுக்கீடு என்பது சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கியவர்களின்  முன்னேற்றத்திற்காக மட்டும் செய்யப்பட்ட ஏற்பாடல்ல. சமூகத்தில் உள்ள அனைத்து பிரிவுகளிலும் பின் தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கான முன்னேற்றத்திற்காகவும் செய்யப்பட்ட ஏற்பாடு. எனவே பொருளாதார அடிப்படையில் மட்டும் இடஒதுக்கீடு வழங்குவது அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பை மீறவில்லை என தனது தீர்ப்பில் கூறினார். மேலும் இந்த இடஒதுக்கீடு ஏற்கனவே உள்ள இடஒதுக்கீட்டு பிரிவில் வழங்கப்படாமல் தனிப் பிரிவில் வழங்கப்படுவதால் சமத்துவக்கோட்பாடு பாதிக்கப்படவில்லை என்றும், 50 சதவீத இடஒதுக்கீடு என்கிற உச்சவரம்பு தளர்த்தக்கூடியதுதான் என்றும் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தெரிவித்தார்.  இந்த தீர்ப்பை அமோதிக்கும் வகையில் நீதிபதிகள் பீலா எம்.திரிவேதியும், ஜே.பி.பர்திவாலாவும் தங்கள் தீர்ப்பினை வழங்கினர். 

நீதிபதி பர்திவாலா தனது தீர்ப்பில், தனிப்பட்ட நலன் சார்ந்ததாக மாறும் அளவிற்கு இடஒதுக்கீடு காலவரையறையின்றி தொடரக் கூடாது என்று கூறினார்.  இடதுஒதுக்கீடு தேவைப்படுபவர்களுக்கு அது கிடைக்கும் வகையில், பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் உள்ள பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள் அந்த பிரிவிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் யார் என்பதை நிர்ணயம் செய்யும் முறைகள் தற்காலத்திற்கு ஏற்ப மாற்றப்பட வேண்டும் என்றும் நீதிபதி பர்திவாலா தனது உத்தரவில் கூறியிருந்தார். 

10% இடஒதுக்கீட்டுக்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதி ரவீந்திரபட், பொருளாதார ரீதியில் இடஒதுக்கீடு வழங்குவது அரசியல் சாசனத்திற்கு முரணானது அல்ல என்கிற கருத்தில் ஒத்துப்போனாலும், எஸ்.சி, எஸ், டி, ஓ.பி.சி பிரிவினரை பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கியிருப்பது அரசியல் சாசனத்திற்கு முரணானது என்று தனது தீர்ப்பில் கூறியிருந்தார். அரசியல் சாசனம் யாரையும் விலக்கிப் பார்க்கும் மொழியை பேசவில்லை என்றும் ஆனால் 103வது அரசியல் சாசன சட்ட திருத்தம் விலக்கிப் பார்க்கும் மொழியை பேசுவதாகவும் கூறிய நீதிபதி ரவீந்திரபட், இந்த சட்டத் திருத்தம்  நீதியின் கொள்கைக்கு முரணானது என்பதால் அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பையும் மீறும் செயலாகும் என்றும் தனது உத்தரவில் கூறியிருந்தார். இந்த தீர்ப்பை தாம் ஆமோதிப்பதாக தலைமை நீதிபதி யூயூ லலித் தனது உத்தரவில் தெரிவித்திருந்தார். 

ஆட்சி கலைப்புக்கு கடிவாளம் போட்ட தீர்ப்பு 

மத்தியில் ஆட்சிக்கு வரும்போது அரசியல் கட்சிகள் தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக மாநில அரசுகளை கலைப்பதற்கு கடிவாளம் போட்ட தீர்ப்பாக கருதப்படும் எஸ்.ஆர் பொம்மை வழக்கிலும், அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பு என்கிற முக்கியமான அளவுகோலை வைத்தே உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது. கர்நாடகாவில் எஸ்.ஆர். பொம்மை தலைமையிலான ஜனதா தள அரசு நடைபெற்று வந்தபோது கே.ஆர்.மெலாகரி தலைமையில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சிலர் போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து எஸ்.ஆர்.பொம்மை அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக ஆளுநர் வேங்கடசுப்பையா மத்திய அரசுக்கு அறிக்கை அளித்தார். அப்போது மத்தியில் ஆண்ட ராஜீவ்காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு அளித்த பரிந்துரையின் பேரில் எஸ்.ஆர் பொம்மை அரசை சட்டப்பிரிவு 356ஐ பயன்படுத்தி கலைத்து  குடியரசு தலைவர் வெங்கட்ராமன் உத்தரவு பிறப்பித்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு சென்றபோது அரசியல் சாசன சட்டப்பிரிவு 356 மத்திய அரசால் தவறாக பயன்படுத்தப்படாத வகையில் பல்வேறு உத்தரவுகளை உச்சநீதிமன்றம் வழங்கியது.

1. சட்டப்பிரிவு 356ஐ பயன்படுத்த குடியரசு தலைவருக்கு உள்ள அதிகாரம் எல்லையற்றதல்ல

2.நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் பெற்ற பின்னர்தான் சட்டப்பிரிவு 356ஐ பயன்படுத்தி மாநில சட்டமன்றங்களை கலைக்க முடியும்.

3. 356 சட்டப்பிரிவை பயன்படுத்தி மாநில சட்டமன்றங்களை கலைப்பது நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டது.

4. மாநில அரசுகளை கலைப்பதற்காக 356 சட்டப்பிரிவு தவறாக பயன்படுத்தப்பட்டிருந்தால்,  கலைக்கப்பட்ட ஆட்சியை மீண்டும் பதவியில் அமர்ந்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு என்பது உள்ளிட்ட முக்கிய உத்தரவுகளை உச்சநீதிமன்றம் வழங்கியது.

இந்த தீர்ப்புக்கு பின்னர் சட்டப்பிரிவு 356ஐ பயன்படுத்தி மாநில அரசுகளை மத்திய அரசு கலைப்பது வெகுவாகக் குறைந்தது. இந்திய அரசியல் வரலாற்றில் அதிகம் மேற்கோள்காட்டப்பட்ட வழக்குகளில் ஒன்றாகவும் எஸ்.ஆர்.பொம்மை வழக்கு திகழ்கிறது.

-எஸ்.இலட்சுமணன்

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading