சென்னையில் உள்ள OPPO செல்போன் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் 2வது நாளாக சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய மொபைல் சந்தையில் சீன நிறுவனங்களே அதிகமாக ஆக்கிரமித்துள்ளன. மலிவு விலையில் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட மொபைல்களை தருவதால் பெரும்பாலான மக்கள் அந்த மொபைகளையே விரும்புகின்றனர். குறிப்பாக விவோ, ஓப்போ, ரெட்மி மொபைல்கள் போன்ற நிறுவனங்கள் தங்களுக்கு என தனி வாடிக்கையாளர்களையே வைத்துள்ளனர். அவர்கள் மீண்டும் எத்தனை முறை மொபைல் வாங்கினாலும் அதே நிறுவனத்தின் மொபைல்களையே வாங்கி வருகின்றனர். இதனால், இந்திய மொபைல் நிறுவனங்கள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயின.
இந்த நிலையில், ஓப்போ நிறுவனத்தின் மீது வரி ஏய்ப்பு, முறையான வருவாய் கணக்குகளை காட்டவில்லை போன்ற குற்றச் சாட்டுகள் எழுந்தது. இதன் அடிப்படையில் OPPO நிறுவனத்தின் மும்பை, டெல்லி, சென்னை உள்ளிட்ட இடங்களில் உள்ள அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.
அதன் தொடர்சியாக இன்று இரண்டாவது நாளாக கொட்டிவாக்கம் நேரு சாலையில் உள்ள அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை அனல்பறக்க நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் சுமார் 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டிருக்கும் நிலையில், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.








