2025ம் ஆண்டின் கடைசி படங்கள் – சிறை, ரெட்டதல படங்களில் எது பெஸ்ட்!

தமிழில் இந்த வாரம் வெளியான திரைப்படங்களின் மினி விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2025ம் ஆண்டின் சினிமா வெளியீடு இந்த வாரத்துடன் முடிகிறது. இந்த ஆண்டின் கடைசி படங்களாக விக்ரம் பிரபுவின் சிறை, அருண் விஜய் நடித்த ரெட்ட தல, சோனியா அகர்வால் நடித்த பருத்தி மற்றும் புதுமுகங்கள் நடித்த ரகசிய சினேகிதனே படங்கள் திரைக்கு வந்துள்ளது. இந்த படங்களின் மினி ரிவியூ இதோ…!

சிறை:

சிறை திரைப்படம் திருச்சியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு சினிமாவுக்கு ஏற்றபடி மாற்றியமைக்கப்பட்ட கதை. ‘டாணாக்காரன்’ படத்தின் இயக்குனர் தமிழ் தனக்கு நேர்ந்த அனுபவத்தை சிறை கதையாக எழுதியிருக்கிறார். வெற்றிமாறனிடம் பல ஆண்டுகள் உதவியாளராக இருந்த சுரேஷ் ராஜகுமாரி திரைக்கதை எழுதி, இயக்கி இருக்கிறார்.

வேலுாரில் ஆயுதப்படை போலீசாக பணியாற்றும் விக்ரம்பிரபு, வேலுார் சிறையில் இருக்கும் கொலை குற்றவாளி புதுமுகம் அக் ஷயை சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து செல்கிறார். அந்த பேருந்து பயணத்தில் அக் ஷய் யார்? அவர் பின்னணி, காதல், அவர் ஏன் கொலை குற்றவாளி ஆனார் என்பதை விக்ரம்பிரபு அறிந்து கொள்கிறார். அவர் காதலை சேர்த்து வைக்க, அவருக்கு நீதி கிடைக்க, தனது போலீஸ் பொறுப்பை மீறி சில விஷயங்களை செய்கிறார். அது என்ன? அக் ஷய் விடுதலை ஆனாரா? காதல் திருமணத்தில் முடிந்ததா என்பது சிறை கதை. இந்த ஆண்டின் சிறந்த படங்களுள் ஒன்றாக சிறை வந்துள்ளனு. காரணம் படத்தின் கதை, திரைக்கதை, நடிப்பு, இசை, ஒளிப்பதிவு, கிளைமாக்ஸ், படம் சொல்லும் மெசேஜ் என பல காரணங்களை சொல்லலாம்.

1987, 1993 என இரண்டு கால கட்டத்தில் வேலுார், சிவகங்கை ஆகிய இரண்டு இடங்களில் இந்த கதை நகர்கிறது. சிவகங்கை கிராம போர்ஷன், அங்கே பெட்டி கடை வைத்திருக்கும் அக் ஷய், அவர் காதலி அனிஷ்மா சம்பந்தப்பட்ட காதல் சீன்கள், இரண்டு குடும்ப பிரச்னைகள் ஆகியவற்றை அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். வேலுார் போர்ஷனில் ஆயுதப்படை ஏட்டைய்யா விக்ரம் பிரபுவின் குணம், வீரம், அவர் குடும்பம், பஸ்சில் வெளிப்படும் அவரின் மனிதநேயம், கோர்ட்டில் நீதிபதி முன்னால் அவர் செய்யும் செயல் ஆகியவை டச்சிங். ஒரு கொலை குற்றவாளி விடுதலைக்காக, அவரை ஆஜர்படுத்த செல்லும் போலீசே உதவுவது, அதற்கு நீதிபதியின் பதில் ஆகியவை சிறை படத்தை மறக்க முடியாத படமாக்குகிறது.

விக்ரம் பிரபுவுக்கு இது 25வது படம், போலீசாக, நண்பனாக, கணவனாக, மனிதநேயம் மிக்கவராக பல இடங்களில் நடிப்பால் கைதட்டல் வாங்குகிறார். இந்த மாதிரி போலீஸ் இருந்தால் இந்த நாடு நல்லா இருக்கும் என்று சொல்லும் அளவுக்கு அவர் கேரக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் நீதிபதியாக வரும் தேனப்பன், இதுவரை தமிழ்சினிமா பார்த்திராத நீதிபதி, அவர் நடிப்புக்கும் சபாஷ். அக் ஷய் காதலியாக வரும் புதுமுகம் அனிஷ்மா காதல் காட்சிகளில் மட்டுமல்ல, சென்டிமென்ட் எமோஷனல் காட்சிகளிலும் பின்னி எடுத்து இருக்கிறார்.

விக்ரம்பிரபு மனைவியாக வரும் அனந்தா நடிப்பும், பேச்சும் படத்துக்கு பிளஸ். விக்ரம்பிரபுவுடன் சக போலீசாக வருபவர்கள், சிவகங்கை மனிதர்கள், கோர்ட் காட்சிகளில் வருபவர்கள், சக கைதிகள் நடிப்பும் எதார்த்தம். ஒரு சீனில் வந்தாலும் ஒரு பெயர் விஷயத்தில் சில வசனங்கள் பேசி பலரை கேள்வி கேட்க வைக்கிறார் மூணாறு ரமேஷ். ஹீரோயின் அக்கா, அவர் கணவராக வரும் ரகு காட்சிகளிலும் படத்துக்கு பிளஸ். ரகுவின் வில்லத்னம், அவரின் கோபம், அவரின் ஆணவ காட்சிகள் படத்தை விறுவிறுப்பாக்குகிறது.

பெயர் காரணமாக பாதிப்பு

மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு அந்த கால வேலுார், சிவகங்கை பஸ் ஸ்டாண்டு, போலீஸ் ஸ்டேஷன், சிறை, கோர்ட் காட்சிகளை அழகாக, உயிர்ப்புடன் காண்பிக்கிறது. பிலோமின் எடிட்டிங் படத்தை வேகமாக்கி இருக்கிறது. மன்னிச்சிரு, நீலோத்தி பாடல்களிலும், பின்னணி இசையிலும் தனது பங்கை சிறப்பாக செய்து, படத்தின் வெற்றிக்கு உதவி இருக்கிறார் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர். தமிழ் சினிமாவில் சொல்லப்படாத ஆயுதப்படை போலீசின் பணி, அவர்கள் சந்திக்கும் சிரமங்கள், மன உளைச்சல்களை தெளிவாக சொல்லியிருக்கிறார் தமிழ். எளிய மக்களுக்கு போலீசும், நீதித்துறை உதவ வேண்டும். அவர்களின் நண்பனாக செயல்பட்டால் இந்த சமூகம் நன்றாக இருக்கும் என்ற கருவும், பெயர் காரணமாக ஒரு பிரிவினர் எப்படி பாதிக்கப்படுகிறார்கள். அதனால் அப்பாவிகள் எப்படி தண்டிக்கப்படுகிறார்கள் என்ற இயக்குனர் சுரேஷ்ராஜகுமாரி சொல்லும் மெசேஜ் வரவேற்கப்பட வேண்டியது. குறிப்பாக, கிளைமாக்ஸ், அடுத்து வரும் விக்ரம்பிரபு காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன.

ரெட்ட தல:

தனது காதலியை சந்திக்க புதுச்சேரி வரும் காளி என்ற அருண் விஜயும், ஒரு வழக்கிற்காக கையெழுத்து போட வரும் உபேந்திரா என்ற இன்னொரு அருண்விஜயும் யதேச்சையாக சந்திக்கிறார்கள். காளியின் காதலியான ஹீரோயின் சித்தி இத்னானி பணத்தாசை காரணமாக சில விஷயங்கள் சொல்ல, உபேந்திராவை கொன்றுவிட்டு, தானே அவராக மாறுகிறார் காளி. ஆனால் கோவாவில் உபேந்திரா செய்த கொலைக்காக அவரை கொல்ல துடிக்கிறது வில்லன் ஹரிஷ்பெரடி, யோகேஷ் தலைமையிலான கூட்டம். இதற்கிடையில் புதுச்சேரி போலீசான ஜான்விஜயும் துரத்த, இவர்களின் சிக்கிய அருண்விஜயும், அவர் காதலியும் தப்பித்தார்களா? ஆள்மாறாட்டத்தால் வேறு என்ன பிரச்னைகள் வருகிறது என்பது ரெட்ட தல படத்தின் கதை.

இரட்டை வேடத்தில் அருண் விஜய் சிறப்பாகவே நடித்து இருக்கிறார். குறிப்பாக, பைட் சீன்களில் பிரமாதப்படுத்தி இருக்கிறார். ஒரு அருண்விஜய் கெட்டவர் என்றால், இன்னொரு அருண்விஜய் இன்னும் கெட்டவர். இவர்கள் என்னென்ன செய்தார்கள். பதிலுக்கு அவர்கள் அனுபவிக்கும் சிக்கல்கள் என்ன என்பதை விறுவிறு கதையாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் கிரிஷ் திருக்குமரன். கிளைமாக்ஸ் டுவிட்ஸ்ட், ஆக் ஷன் காட்சிகள் படத்துக்கு பிளஸ். பணத்தாசை பிடித்தவராக கொஞ்சம் கிரே ஷேட்டில் நடித்து இருக்கிறார் சித்திஇத்னானி. அவரின் நடிப்பு, அந்த சாங் ஓகே. ஜான்விஜய் நடிப்பு, பேச்சு, இரட்டை அர்த்த வசனங்கள் போரடிக்கிறது.

கோவா வில்லன்கள், அவர்கள் சண்டையிலும் சுவாரஸ்யம் இல்லை. உபேந்திரா காதலியாக, டாக்டராக வரும் தீவரா நடிப்பு, அவர் கேரக்டர் படத்துக்கு பலம். வில்லன் மனைவியாக வந்து போகிறார் தன்யா ரவிசந்திரன். படத்தின் பெரும்பகுதியை சண்டை காட்சிகளும், சேசிங்கும் ஆக்கிரமத்து இருப்பது படத்தின் மைனஸ். காதல், அம்மா சென்டிமென்ட் காட்சிகளை இன்னும் அழுத்தமாக எடுத்து இருக்கலாம். சாம் சி.எஸ் இசையில் தனுஷ் பாடிய கண்ணம்மா ரசிக்க வைக்கிறது. டிஜோடாமியின் ஒளிப்பதிவு உண்மையில் அபாரமாக இருக்கிறது. இரவு காட்சிகளை அழகாக காண்பிக்கிறது. பின்னணி இசையும் பரபர. கொஞ்சம் வித்தியாசமான ஆக் ஷன் கதை என்றாலும் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் இந்த இரட்டை வேட கதை பெரிதாக ஹிட்டாகி இருக்கும்.

பருத்தி:

குரு.ஏ இயக்கத்தில் சோனியா அகர்வால் ஒரு மாறுபட்ட வேடத்தில் நடித்திருக்கும் படம் பருத்தி. கணவனை இழந்த சோனியா அகர்வால் ஊருக்கு வெளியே வசிக்கிறார். கூலி வேலை செய்கிறார். தனது மகனை பிரிந்து இருக்கிறார். அது ஏன்? பாட்டி வீட்டில் வளரும் அவர் மகன் திலிப்ஸ் சக தோழி வர்ஷிட்ட சுகன்யா மீது பாசமாக இருக்கிறார். ஆனால், ஜாதி அவர்களை பிரிகிறது. அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை கிராமத்து பின்னணியில் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

திலிப்ஸ், வர்ஷிட்ட சுகன்யா நட்பு, அதனால், இருவர் வீட்டில் ஏற்படும் பிரச்னைகள், ஜாதி வெறி பிடித்தவர்கள் இதனால் என்ன செய்கிறார்கள். ஜாதியால் பாதிக்கப்படும் இந்த இரண்டு நண்பர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை சற்றே உருக்கமாக பதிவு செய்து இருக்கிறார்கள். இரண்டு குழந்தை நட்சத்திரங்களின் நடிப்பும், அவர்கள் கேட்கும் கேள்வியும்தான் படத்திற்கு பலம். நான் ஏன் குடும்பத்தை பிரிந்தேன். ஊருக்கு வெளியே ஏன் வசிக்கிறேன் என்று சோனியாஅகர்வால் பேசும் இடம் உருக்கம். மற்றபடி, உணர்ச்சிபூர்வமான கதை என்றாலும் அதை சரியாக சொல்லவில்லை இயக்குனர்.

ரகசிய சினேகிதனே:

மனைவி ஸ்வேதாவுக்கு ஸ்மார்ட் போன் மீது ஆசை வர, அதை வாங்கிக்கொடுக்கிறார் கணவன் குருபிரகாஷ். அந்த போன் மூலமாக ரகசிய சினேகிதன் வேல்முருகனுடன் வாட்ஸ் ஆப்பில் அடிக்கடி பேசுகிறார் மனைவி.

இது கணவனுக்கு தெரிய வர, அந்த குடும்பத்தில் என்ன நடக்கிறது. தீர்வு என்ன என்பதை செல்போன் பாதிப்பு பின்னணியில் சொல்கிறார் இயக்குனர் சேகர் கன்னியப்பன். சோஷியல் மீடியா பாதிப்புகளை, அதனால் பெண்கள், குடும்பத்தினர் பாதிக்கப்படுவதை சொல்கிறது கதை.

சிறப்பு செய்தியாளர் : மீனாட்சிசுந்தரம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.