தமிழ்நாட்டின் நிதி நிர்வாகத்தை, கடந்த பத்தாண்டுகளாக, அதிமுக ஆட்சி சூரையாடியதாக முதலமைச்சர் பேசியிருப்பதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆட்சியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்ட அரசாக அதிமுக அரசு திகழ்ந்தது. ஆனால், அண்மையில் நடைபெற்ற அரசு ஊழியர்கள் மாநாட்டில், திமுகதான் அரசு ஊழியர்களுக்கு நிறைய செய்ததுபோலவும், கடந்த பத்தாண்டுகளாக தமிழ்நாட்டின் நிதி நிர்வாகத்தை அதிமுக சூரையாடியதாகவும் முதலமைச்சர் பேசியிருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படியை கூட ஒழுங்காக தர இயலாத திறமையற்ற அரசாக திமுக உள்ளதாக அவர் விமர்சித்தார். தொடர்ந்து மத்திய அரசிடம் இருந்து நமக்கு வரவேண்டிய வருவாய் மற்றும் நிவாரணத்தை பெறுவது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, அதிமுகவை குறை சொல்வது பொறுப்பை தட்டிக் கழிப்பதற்கு சமம் என குற்றம்சாட்டியுள்ளார்.







