இந்தியாவில் 6500 கோடி ரூபாய் முதலீட்டில், 7 ஆயிரம் குக் கிராமப்பகுதிகளுக்கு 4ஜி செல்போன் சேவை வழங்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆந்திரப்பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா ஆகிய ஐந்து மாநிலங்களில் உள்ள 44 மாவட்டங்களில், 7,287 குக்கிராமங்களுக்கு, 4 ஜி செல்போன் சேவை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதற்கான திட்ட மதிப்பீடு 6 ஆயிரத்து 466 கோடி ரூபாய் ஆகும். மேலும் இந்த திட்டத்தின் மூலம் டிஜிட்டல் இணைப்பு வசதியும் மேம்படுத்தப்பட உள்ளது. அதுமட்டுமில்லாமல் இணைய முறை கல்வி, திறன் மேம்பாடு, பேரிடர் மேலாண்மை, மின்னணு ஆளுகை முயற்சிகள், புதிய தொழில் நிறுவனங்களைத் தொடங்குவதற்கும், மின்னணு வர்த்தகத்திற்கு உதவும் வகையிலும் இத்திட்டம் அமைய இருக்கிறது.
இதனையடுத்து டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றி, உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து, தற்சார்பு இந்தியாவின் குறிக்கோள்களை நிறைவேற்ற 4 ஜி சேவை மிக உதவியாக இருக்கும் என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.








