“இடைத்தேர்தலில் சரியான அடி கொடுத்தால் தான், ஆட்சியில் கவனம் செலுத்துவார்கள்!” – மு.க.ஸ்டாலின்

குழந்தைகள் சொல்லிட்டார்கள் என்று மாற்றி வாக்களிக்க நினைக்காதீர்கள், அந்த குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “ஏழு, எட்டு மணி நேரம் மின்வெட்டு, இரவில் மக்கள் சாலை மறியல் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இப்படி மக்களின் நிம்மதியைக் கெடுத்து அலைய விட்டுட்டு, முதலமைச்சர் மட்டும் பண்ணையார் போல் பட்டு வேஷ்டி, சட்டையில் பந்தா செய்துகொண்டு இருக்கிறார்.

காவிரி விவகாரத்துல கர்நாடகாவுக்கு எதிராக எதுவும் பேசாமல், அமைதியாக இருக்கிறார். எதிர்ப்பு தெரிவிக்க உங்களுக்கு என்ன பயம், CM சார்? ப்ரோ…என்ன பயம் என சொல்லுங்க? என்ன தயக்கம்? ஏன் பயப்படுறீங்க?

ஒருபக்கம் பல விஷயங்களை அறிவித்துவிட்டு, யூ-டர்ன் அடித்துவிட்டார்கள்; மற்றொருபக்கம் நமக்கு வர வேண்டிய முதலீடுகள் எல்லாம் ஆந்திராவிற்கு யூ-டர்ன் அடித்து போய்க்கொண்டு இருக்கிறது. ஆட்சி என்றால் என்னவென்றே தெரியாத ஒரு கூட்டத்திடம் தமிழ்நாடு சிக்கி, சீரழிந்துகொண்டு இருக்கிறது.

தப்பித் தவறி ஆளுங்கட்சி இந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற்றால். மின் கட்டணம் உயரும், பால் விலை உயரும், பேருந்து கட்டணம் உயரும், பத்திரப்பதிவு கட்டணம் உயரும், வரிகளும் உயரும்; அதனால் தான் சொல்றேன், இந்த இடைத்தேர்தலில் சரியான அடி கொடுத்தால் தான், எம்.எல்.ஏ. ஷாப்பிங்கை நிறுத்திட்டு, ஆட்சியில் கொஞ்சம் கவனம் செலுத்துவார்கள். குழந்தைகள் சொல்லிட்டார்கள் என்று மாற்றி வாக்களிக்க நினைக்காதீர்கள்; அந்த குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்” என்று அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.