திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முதலிபாளையம் மற்றும் நல்லூர் பகுதிகளில் கைவிடப்பட்ட கல் குவாரிகளில் தொழிற்சாலைக் கழிவுகள் கொட்டப்பட்டதால் நிலத்தடி நீர் மாசுபாடு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக வெளியான செய்திகளை அடிப்படையாக கொண்டு டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு தாமாக முன்வந்து கையிலடுத்த வழக்கானது நீதிபதிகள் அருண் குமார் தியாகி, நீதித்துறை உறுப்பினர் ஏ. செந்தில் வேல் மற்றும் நிபுணர் அப்ரோஸ் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம், மத்திய நிலத்தடி நீர் வாரியம், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோரை வழக்கில் இணைத்து உத்தரவிட்டது.
மேலும், சந்தேகிக்கப்படும் மாசடைந்த இடத்தைப் குறித்து விரிவான விசாரணையை மேற்கொள்ள ஏதுவாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் , அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பிற நிபுணர்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு பல்துறை தொழில்நுட்பக் குழுவை அமைக்க வேண்டும்.
மேலும் இந்த ஆய்வு என்பது நிலத்தடி நீர் மாசுபாட்டின் அளவு, எவ்வாறு மாசு அடைகிறது என்பதை கண்டறிவதோடு ,அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும், நிலத்தடி நீரின் தரத்தை மேம்படுத்துவதற்கான குறுகிய கால மற்றும் நீண்ட கால உத்திகள், சுற்றுச்சூழல் பாதுகாப்புகளை வலுப்படுத்தவும், நீர் மாசு அடைவதை தடுக்கவும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவரிவான அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை சென்னை தென் மண்டல பசுமை தீர்ப்பாய அமர்வுக்கு மாற்றி, விசாரணையை வரும் 2027 ஜனவரி 22ம் தேதிக்கு ஒத்திவைத்தது.




