ஹரியானா மாநிலம், அம்பாலாவில், காரில் சென்று கொண்டிருந்த இருவரை வழிமறித்த மர்ம கும்பல், இளைஞர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றது.
அம்பாலா – ஜெகத்ரி நெடுஞ்சாலையில், பஞ்சாப் மாநில பதிவெண் கொண்ட கறுப்பு நிற கார் ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது, அந்த காரை பின் தொடர்ந்து வந்த வெள்ளை நிற கார் ஒன்று, திடீரென அந்த காரை வழிமறித்து நிறுத்தியுள்ளது. வெள்ளை நிற காரிலிருந்து இறங்கிய மர்ம நபர்கள், கறுப்பு நிற காரில் இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டிருக்கின்றனர். துப்பாக்கிச் சூட்டை முடித்துவிட்டு அவர்கள் வந்த அதே காரில் மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவத்தில், கறுப்பு நிற காரில் பயணம் செய்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மற்றொரு இளைஞரை அந்த இடத்திற்கு அருகில் வந்த பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, துப்பாக்கிச் சூடு தொடர்பான சிசிடிவி பதிவுகள் வெளியாகியுள்ளன. இந்த சிசிடிவி பதிவுகள் வெளியாகி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய மர்ம கும்பலை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடைபெற்றுள்ள இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அம்பாலா பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
விசாரனையில், இறந்தவர் (மோகித்) ஒரு பிரபல ரவுடி கும்பலோடு தொடர்புடையவர் எனவும், இவர் மீது வழக்கு பதிவாகியிருப்பதாகவும், இந்த சம்பவம் இரண்டு பெரிய ரவுடி கும்பலுக்கும் உள்ள முன்பகையால் ஆனாது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.








