பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக பகவந்த் மான் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநில சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் 20-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. இந்த நிலையில் தங்கள் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் என ஆம் ஆத்மி அறிவித்திருந்தது. அதன்படி, குறுஞ்செய்தி அழைப்புகள் மூலமாக மக்களின் கருத்துகள் கேட்கப்பட்டன.
இந்த நிலையில், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, முதலமைச்சர் வேட்பாளராக பகவந்த் மான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கெஜ்ரிவால் அறிவித்தார். அவருக்கு சுமார் 93 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளதாக அவர் கூறினார்.
பிரபல நகைச்சுவை நடிகராக வலம்வந்த பகவந்த் மான், 2014-ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். அப்போது, நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அவர், மீண்டும் 2019-ஆம் ஆண்டு சங்க்ரூர் தொகுதியில் வெற்றி பெற்று, தற்போது மக்களவை உறுப்பினராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.








