நாட்டுப்படகு மீனவர்கள் மீது விசைப்படகு மீனவர்கள் தாக்குதல் நடத்தியதை கண்டித்து நாட்டுப்படகு மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் நாட்டுப்படகு மீனவர்களைத் தாக்கிய கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்களைக் கைது செய்யவும் பாதிப்படைந்த மீனவர்களுக்கும், சேதமடைந்த படகுக்களுக்கும் நிவாரணம் வழங்கவும் நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 கிராம மக்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தமாகக் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் சின்ன முட்டத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் இடிந்தகரையை சேர்ந்த நாட்டுப் படகு மீது மோதியதில் படகு சேதம் அடைந்தது. இதில் இரண்டு மீனவர்கள் படுகாயம் அடைந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது குறித்து கூடங்குளம் கடலோரக் காவல் குழுப் போலீசார் வழக்கு பதிவுச் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அவா்களை கைது செய்ய வேண்டும் எனவும் பாதிப்படைந்த மீனவர்களுக்கும் சேதமடைந்த படகுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இடிந்தகரை, கூட்டப்புளி, கூடுதாழை, உவரி உட்பட 10 கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தமாகக் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.
இதனால் பல்வேறு ஊர்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
-கா. ரூபி