அதிமுகவில் உரிமை கோர சசிகலாவிற்கு எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதம் முன்வைத்துள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தற்போது விசாரணையில் இருந்து வருகிறது.
வழக்கில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் முகங்களாக தன்னையும் எடப்பாடி பழனிசாமியையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு, இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது எனவும், அதிமுகவில் உரிமை கோர சசிகலாவிற்கு எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை எனவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்துள்ளது. அதிமுக தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், சசிகலா தரப்பு வாதங்களுக்காக வழக்கு விசாரணை நாளை மறுதினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் அதிமுகவில் சசிகலா சேர்த்துக்கொள்ளப்படுவாரா என்ற கேள்விக்கு, தலைமைக் கழக நிர்வாகிகள் கூடி பேசி முடிவெடுப்பார்கள் என ஓ.பன்னீர்செல்வம் கூறியது அக்கட்சிக்குள் விவாதங்களை உண்டாக்கியது. இந்த நிலையில் சசிகலா தொடர்பான வாதத்தை முன்வைத்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.







