“திமுக ஆட்சியில் ஊழலை தவிர வேறு ஒன்றும் நடக்கவில்லை” – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டி

திமுக ஆட்சியில் ஊழலை தவிர வேறு ஒன்றும் நடக்கவில்லை என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காலை உணவு விருந்து அளித்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இபிஎஸ் இல்லத்தில் இந்த உணவு விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்துக்குப் பிறகு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

“எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் காலை உணவு அருந்தினேன். அனைத்து துறைகளிலும் ஊழல் செய்தது மட்டும் தான் திமுக அரசின் சாதனை. திமுக ஆட்சியில் ஊழலை தவிர வேறு ஒன்றும் நடக்கவில்லை என அனைத்து தரப்பு மக்களும் புரிந்துகொண்டனர். தமிழக நலனுக்காக திமுக அரசு எதுவும் செய்யவில்லை. ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை முழுவதுமாக வீழ்த்தி, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும். எடப்பாடி பழனிசாமி என்னுடைய நீண்டகால நண்பர்.

தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்திற்கான சிறந்த எதிர்கால வளர்ச்சியை கொண்டு வரும். நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு உள்ளான துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதவி விலக வேண்டும். திமுக ஆட்சியில் பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தேசிய அளவில் மோடியும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியும் தலைமை தாங்குகின்றனர். நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார்”

இவ்வாறு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.