ஸ்பெயினில் கார்டோபா மாகாணத்தில் மலகா பகுதியில் இருந்து கடந்த ஜன.19ம் தேதி மாட்ரிட்-பூர்டா டி அதோசா நகர் நோக்கி ஐரியோ என்ற தனியார் நிறுவனத்தின் அதிவிரைவு ரயில் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. இந்த ரயில் அடாமுஸ் அருகில் சென்ற போது திடீரென தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. இந்த தடம் புரண்ட ரயில் மற்றொரு தண்டவாளத்தில் மாட்ரிட் நகரில் இருந்து ஹுவெல்வா நோக்கி சென்ற அரசு ரயில் மீது மோதியது.
இந்த சம்பவத்தில் பயணிகள், ரயில் பெட்டிகளுக்குள் சிக்கி கொண்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். தொடர்ந்து, ஜன்னலை உடைத்து கொண்டு வெளியேறும்போது, பயணிகள் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டு உள்ளன. இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர் என உறுதிப்படுத்தப்பட்டது. ரயில் தடம் புரண்டபோது நிலநடுக்கம் ஏற்பட்டது போன்று இருந்தது என பயணிகள் சிலர் கூறினர். ரயிலுக்குள் புகையும் பரவியதாக சில பயணிகள் தெரிவித்தனர். ரயில் தடம் புரண்ட விபத்தில் 21 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ஸ்பெயினில் மற்றொரு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் கனமழை பெய்தது. இதனால், சுவர் ஒன்று இடிந்து ரயில் தண்டவாளத்தில் விழுந்துள்ளது. அப்போது, பார்சிலோனா நகரின் அருகே ஜெலிடா என்ற பகுதியில் சென்ற பயணிகள் ரயில் தண்டவாளத்தில் கிடந்த சுவரில் மோதி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ரயில் ஓட்டுநர் உள்பட 37 பேர் காயமடைந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழு இந்த விபத்தில் படுகாயமடைந்த ரயில் ஓட்டுநருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தும் அவர் உயிரிழந்தார். மேலும், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.







