தமிழக சட்டப்பேரவையின் 3ம் நாள் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் பதில் அளித்தனர். தொடர்ந்து, சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ தங்கமணியின் கேள்விக்கு பதில் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
“போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை நாங்கள் சிறையில் அடைக்கவில்லை. அரசு ஊழியர்களுக்கு எதிராக டெஸ்மா, எஸ்மா சட்டங்களை நாங்கள் பயன்படுத்தவில்லை. அதிமுக ஆட்சியை போல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை நாங்கள் இரவோடு இரவாக கைது செய்யவில்லை. அரசு ஊழியர்களை கைது செய்து சிறையில் அடைத்த சம்பவங்கள் அதிமுக ஆட்சியில் நடந்தன. அரசு ஊழியர்களின் ஊதியம் குறித்து எடப்பாடி பழனிசாமி கொச்சைப்படுத்தி பேசியதை யாரும் மறந்துவிட மாட்டார்கள். அரசு ஊழியர்கள் மீது அதிமக ஆட்சியில் ஏன் அக்கறை காட்டவில்லை?.
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்ததும் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருப்பது அதிமு.வுக்கு பிடிக்கவில்லை. அரசு ஊழியர்களின் 23 ஆண்டுகால கோரிக்கையை நாங்கள் நிறைவேற்றினோம். அதனால்தான் கோட்டையில் எனது அறைக்கே வந்து எனக்கு இனிப்பு ஊட்டினார்கள். அரசு ஊழியர்களின் போராட்டத்தை நாங்கள் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம். அவர்களை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளில் எதை நிறைவேற்ற முடியும் என சிந்தித்து, அந்த கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேற்றித்தரப்படும்”
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.







