வடமாநில தொழிலாளர் விவகாரம்: சமூக வலைதளங்களில் போலி வீடியோ பரப்பியவர் கைது!

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல போலியான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பிய பீகார் மாநிலத்தை சேர்ந்த இளைஞரை திருப்பூர் தனிப்படை போலீசார் தெலுங்கானாவில் வைத்து கைது செய்தனர். தமிழகத்தில் வட மாநில…

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல போலியான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பிய பீகார் மாநிலத்தை சேர்ந்த இளைஞரை திருப்பூர் தனிப்படை போலீசார் தெலுங்கானாவில் வைத்து கைது செய்தனர்.

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக தொடர்ந்து பரப்பப்படும்
வதந்தியால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் வட மாநில மக்களிடையே அச்சத்தை
ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் அச்சத்தை போக்கும் விதமாக கடந்த இரண்டு நாட்களாக
பீகார் மற்றும் ஜார்க்கண்ட் ஐஏஎஸ் குழுவினர் திருப்பூர் கோவை சென்னை உள்ளிட்ட
இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தனர்.

இதனிடையே வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில்
பரவும் போலியான வீடியோக்கள் குறித்து திருப்பூர் சைபர் கிரைம் போலீசார்
கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த
ரூபேஸ்குமார் (வயது 25) என்பவருடைய ட்விட்டர் கணக்கில் வேறு மாநிலங்களில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை தமிழகத்தில் நடந்தது போன்று போலியான வீடியோக்களை சித்தரித்து பதிவிட்டிருந்தது தெரியவந்தது.இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் அவரை தொடர்பு கொண்டு இது போலியான வீடியோக்கள் என்றும் உடனடியாக ட்விட்டர் கணக்கில் இருந்து அந்த வீடியோக்களை நீக்கம் செய்யவும் அறிவுறுத்தினர். ஆனால் ரூபேஷ் குமார் அதனை நீக்கம் செய்யாமல் தொடர்ந்து போலியான வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்துள்ளார். இதையடுத்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக ரூபேஷ் குமார் மீது வழக்கு பதிவு செய்த
திருப்பூர் க்ரைம் போலீசார், அவரைப் பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

பீகாரில் இருந்து வெளியேறிய ரூபேஷ்குமார் தெலுங்கானாவில் பதுங்கி இருந்தார்.
அவரது செல்போன் எண்ணை கொண்டு அவர் இருந்த இடத்தை அறிந்த தனிப்படை போலீசார் தெலுங்கானாவில் வைத்து அவரை கைது செய்தனர். அவரை போலீசார் திருப்பூர் அழைத்து வரவுள்ளனர். திருப்பூர் வந்தவுடன் தொடர்ந்து அவரிடம் விசாரணை
மேற்கொள்ளப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.