உத்தரப்பிரதேசத்தில் பொதுவெளியில் எச்சில் துப்பினால் ரூ.250 அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில அரசு கூறியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ‘Mr/Ms Pikku’ என்ற பெயரில் நகரப் பகுதிகளில் ஓர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து அந்த மாநிலத்தின் தூய்மை இந்தியா திட்ட இயக்குநர் நேஹா சர்மா ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன்படி பொது இடங்களில் எச்சில் துப்புவது சட்டப்படி குற்றம் என்றும், இதை மீறுபவர்களுக்கு ரூ. 250 அபராதம் வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த முறை லக்னோ மற்றும் ஆக்ரா மாநகர்களில் அமலில் உள்ளது.
அது தற்போது மாநிலத்தில் உள்ள மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பொதுவெளியில் சிறுநீர் கழித்தல், எச்சில் துப்புவது போன்றவற்றை முழுமையாக ஒழித்து தூய்மை மாநிலமாக்க இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி மக்கள் தொகை 6 லட்சத்துக்கு மேல் உள்ள நகரங்களில் ரூ.250, 6 லட்சத்துக்குக் கீழ் மக்கள் தொகை உள்ள இடங்களில் ரூ.150, நகராட்சிகளில் ரூ.100, பேரூராட்சி பகுதிகளில் ரூ.50 அபராதம் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தக் குற்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு அதே இடத்தில் செலான் கொடுக்கப்பட்டு, உடனடியாக அபராதம் வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.
-ம.பவித்ரா








