பீகார் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்தி வெளியான நிலையில், இது குறித்து விசாரித்து, அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த பீகார் மாநில குழு இன்று சென்னை வருகிறது.
பீகார் தொழிலாளர்கள், தங்களுக்குத் தெரிந்த சிலர் தமிழ்நாட்டில் தாக்கப்பட்டதாகப் பேசும் வீடியோக்கள் அண்மையில் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. தமிழ்நாட்டில், இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று விளக்கமளித்த தமிழ்நாடு காவல்துறை, சமூக ஊடகங்களில் பரவிய குற்றச்சாட்டு தவறாகக் கூறப்படுகிறது என்று தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் பணிபுரியும் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக வெளியான தகவலை அறிந்ததாகவும், தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் பேசி, அங்கு வசிக்கும் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பீகார் தலைமைச் செயலர் மற்றும் காவல்துறை டிஜிபி ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : கன்னியாகுமரி : மீன் வியாபாரியை தாக்கிய பேரூராட்சி ஊழியர்கள் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இந்நிலையில், தமிழ்நாட்டில் வசிக்கும் பீகார் மாநில தொழிலாளர்கள் நிலை குறித்து கேட்டறிவதற்காக பீகாரிலிருந்து இரண்டு IPS அதிகாரிகள் உட்பட 5 பேர் கொண்ட குழு இன்று மாலை சென்னை வருகிறது. பீகார் ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் பாலமுருகன், காவல்துறை அதிகாரி கண்ணன், தொழிலாளர் நலத்துறை சிறப்பு செயலாளர் அலோக் குமார் உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். மாலை 5.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் அரசு உயர் அதிகாரிகளுடன் இந்த பீகார் குழு ஆலோசனை நடத்துகிறது.
ஜார்க்கண்ட் குழுவும் இன்று வருகை
இதே போல், ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்தும் 4 அரசு பிரதிநிதிகள் இன்று சென்னை வருகின்றனர். அவர்கள் இன்று மாலை தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை ஆணையரை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.
மார்ச் 1ம் தேதி நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில், இந்தியாவின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். அதில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த, அனைத்து எதிர்க்கட்சிகளும் கூட்டணி அமைக்க வேண்டும் என்று மேடையில் பேசிய தலைவர்கள் தெரிவித்தனர். இந்த கூட்டத்தில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பீகார் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ்வும் பங்கேற்றிருந்தார். இந்நிலையில், பீகார் சட்டமன்றத்தில், தமிழ்நாட்டில் உள்ள பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பாஜக குற்றம்சாட்டியது.








