நொச்சிகுளம் ஊராட்சி மோசடி வழக்கு – மாவட்ட ஆட்சியருக்கு பறந்த உத்தரவு!

நொச்சிகுளம் ஊராட்சி மோசடி வழக்கு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ரோஸ்லின் மேரி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே அமைந்துள்ள நொச்சிகுளம் ஊராட்சியில் கடந்த 2021ம் ஆண்டு முதல் வேலம்மாள் என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். அவரது கணவர் சீனிவாசன் ஊராட்சி மன்ற தலைவர் போல் செயல்பட்டு நிர்வாகத்தை செயல்படுத்தி வந்தார். ஊராட்சியில் போலி கணக்குகள் மூலம் அரசு வழங்கும் நிதியை கையாடல் செய்தார்.

மேலும் ஊராட்சியில் மழை நீர் வடிகால் சுத்தம் செய்தல், சாக்கடை மற்றும் தெருவிளக்கு பராமரிப்பு என ஏராளமான பணிகளுக்கு முறையாக டெண்டர் விடாமல், தங்களது சொந்த நிறுவனம் மூலம் ஒப்பந்தம் கையெழுத்திட்டு லட்சக்கணக்கான ரூபாயை கையாடல் செய்தனர். அரசு வழங்கும் நிதியை தங்களது சொந்த வங்கி கணக்கில் வரவைத்து அரசாங்கத்தையும், பொதுமக்களையும் ஏமாற்றி வருகின்றனர். எனவே, நொச்சிகுளம் ஊராட்சியில் அனைத்து பணிகள் மற்றும் ஆவணங்களை சிறப்பு தணிக்கை செய்ய உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் மரியா கிளாட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்,
“தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டம், 1994-ன் கீழ், மாவட்ட ஆட்சியர் அந்தக் குறைகளைப் பெற்றவுடன் உரிய நடவடிக்கைகளை எடுக்கச் சட்டபூர்வ பொறுப்பு உள்ளது. மனுதாரர் அளித்த புகாரின் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் உரிய விசாரணை செய்து விதிகளுக்கு உட்பட்டு உகந்த நடவடிக்கைகளை 12 வார காலத்திற்குள் மேற்கொள்ள வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.