அண்ணாமலை கருத்துக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையொட்டி, ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் திமுக கூட்டணியில் கை சின்னத்திலே போட்டியிடுவதற்காக இன்று தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரை நேரில் சந்தித்து மனு தாக்கல் செய்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கை சின்னத்தில் போட்டியிடுவதற்காக இன்று கூட்டணி கட்சித் தலைவர்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன். என்னைப் பொறுத்தவரை திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெறுவதை விட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டிட்டு வெற்றி பெறுவதை அதிகமாக விரும்புகிறேன். எனது மகன் பணியை நான் தொடர்ந்து செய்ய எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நமது முதலமைச்சர் ஈரோடுக்கு ஏராளமான திட்டங்களை அறிவித்துள்ளார். ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டத்திற்காக நான் பாடுபடுவேன். இதற்காக அமைச்சர் முத்துசாமி, முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுடன் இணைந்து செயல்படுவேன். இந்த தேர்தலில் நிச்சயமாக நாங்கள் மிக பெரும் வெற்றியை பெறுவோம். ஈரோடு மாநகர் பகுதியில் ஏற்பட்டிருக்கும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், சாயக்கழிவு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண பாடுபடுவேன் என்று கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் சிறப்பாக பணியாற்றுகிறார்கள். திமுகவினர் தேர்தல் பணிகளை சிறப்பான முறையில் செய்து வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பே அமைச்சர்கள் முத்துசாமி, நேரு கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். நிச்சயமாக ஈரோடு கிழக்கு தொகுதியில் நாங்கள் மிக பெரிய வெற்றியை பெறுவோம்.
அதிமுகவை பொறுத்தவரை என்ன செய்கிறார்கள் என்பது எனக்கு தேவையில்லை. என்னை பொறுத்தவரை ஈரோடு மக்களுக்கு நல்லது செய்வது மட்டும் தான் எனது நோக்கம். அதை தாண்டி வேறு எதைப் பற்றியும் நான் கவலைப்பட மாட்டேன் என்று கூறிய அவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் அளித்த புகார் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கும் பதிலளித்து பேசினார். அப்போது அவர் அதிமுக ஜெயகுமார் சொன்ன புகார் எல்லாம் எனக்கு தெரியாது. அவர்மீதே ஏகப்பட்ட புகார்கள் இருக்கின்றன என ஈவிகேஎஸ் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக இரு அணிகளையும் இணைக்க முயற்சி செய்து வருகிறாரே என்ற கேள்விக்கும் பதிலளித்த பேசிய ஈவிகேஎஸ்என்னை பொறுத்தவரை அண்ணாமலை மிகப்பெரியவர்., நான் அவரை விட சிறியவன். அதனால் அண்ணாமலை கருத்துக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை எனவும் கூறினார்.
- பி.ஜேம்ஸ் லிசா