திருமண செலவுக்குப் பணம் இல்லை; ரேஷன் கடை ஊழியரைக் கொலை செய்தவர் கைது!

பண்ருட்டி அருகே ரேஷன் கடை ஊழியரைக் கொலை செய்த வழக்கில், இருசக்கர வாகன மெக்கானிக் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த மாளிகைமேடு, புது காலணியைச் சேர்ந்தவர் திலீப்குமார் (வயது 59) ரேஷன்…

பண்ருட்டி அருகே ரேஷன் கடை ஊழியரைக் கொலை செய்த வழக்கில், இருசக்கர வாகன மெக்கானிக் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த மாளிகைமேடு, புது காலணியைச் சேர்ந்தவர் திலீப்குமார் (வயது 59) ரேஷன் கடை ஊழியர். கடந்த 19-ஆம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற திலீப்குமார், மறுநாள் காலை அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுக் கிடந்துள்ளார். அவர் அணிந்திருந்த 2 சவரன் செயினை காணவில்லை. கொலை குறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, துணைக்காவல் கண்காணிப்பாளர் சபியுல்லா, ஆய்வாளர் நந்தகுமார் தலைமையில் தனிப்படை அமைத்து, கொலையாளியைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், மாளிகைமேடு பெட்ரோல் பங்க் அருகில் ஆய்வாளர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த நபர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றுள்ளார். அவரை பிடித்து விசாரித்ததில் அவர், திலீப்குமார் வசித்து வந்த அதே தெருவைச் சேர்ந்த அரவிந்த் என்பதும் அவர் இருசக்கர வாகன மெக்கானிக் என்பதும் தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்தான் திலிப்குமாரை கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

அதன்படி, அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் தனக்குச் செப்டம்பர் 9-ஆம் தேதி திருமணம் செய்ய ஏற்பாடு நடந்ததாகவும் திருமண செலவிற்குப் பணம் இல்லை என்பதால் தனது கடை அருகே இருந்த அஞ்சலை தேவியின் மளிகைக் கடைக்கு அவரது கணவர் திலீப்குமார் அடிக்கடி வருவது வழக்கம். அப்போது, கழுத்தில் செயின், கையில் மோதிரம் போட்டிருந்ததால், அவரை கொலை செய்து நகையைப் பறித்திடத் திட்டமிட்டதாகவும், தினமும் இரவு 7 மணிக்கு இயற்கை உபாதைக்காக திலீப்குமார் கரும்பு தோட்டத்திற்கு வருவார் என்பதால், கடந்த 19-ஆம் தேதி இரவு அங்குக் காத்திருந்ததாகவும் கூறியுள்ளார்.

அண்மைச் செய்தி: ‘‘ரயில் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்’ – ரயில்வே காவல்துறை கூடுதல் இயக்குநர் வனிதா’

மேலும், திலீப்குமார் வந்தவுடன் அவரிடம் பேச்சுக் கொடுத்தபடி, சிறிய பேனாக் கத்தியால் கழுத்து, கை, வயிற்றுப் பகுதியில் சரமாரியாகக் குத்தி, கழுத்தை நெரித்து கொலை செய்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் நகையைப் பறித்துக்கொண்டு ஐயனார் கோவில் குதிரை சிலை அருகில் மறைத்து வைத்துவிட்டதாகக் கூறியுள்ளார். மேலும், கொலை செய்ததைக் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக வீட்டிற்குச் சென்று மிளகாய்ப் பொடி எடுத்து வந்து கொலை நடந்த இடத்தில் தூவினேன் எனத் தெரிவித்துள்ளார்.

திலீப்குமார் மகன் வினோத்குமார் தனது தந்தையைக் காணவில்லை எனக் கூறியபோது, அவருடன் சேர்ந்து தேடியதாகவும் போலீசார் வாகன சோதனையின்போது போலீசாரை கண்டு பயத்தில் தப்பியோட முயன்றபோது, என்னை விரட்டி பிடித்தனர் என வாக்குமூலத்தில் அவர் கூறியுள்ளார். பின்னர் அரவிந்தை கைது செய்த போலீசார், 2 சவரன் நகை, பேனாக்கத்தி, ரத்தக்கரை படிந்த சட்டைகளைக் கைப்பற்றியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.