‘ரயில் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்’ – ரயில்வே காவல்துறை கூடுதல் இயக்குநர் வனிதா

ரயில் பயணத்தின்போது கல்லூரி மாணவர்கள் தாக்கிக் கொள்வது சென்னையில் அதிகரித்து வருகிறது. முடிந்தவரை அவர்களைத் தடுக்க முயற்சி செய்வோம், ஆலோசனை வழங்குவோம், அதையும் மீறினால் கைது நடவடிக்கைக்கு வாய்ப்பு உள்ளது என ரயில்வே காவல்துறை…

ரயில் பயணத்தின்போது கல்லூரி மாணவர்கள் தாக்கிக் கொள்வது சென்னையில் அதிகரித்து வருகிறது. முடிந்தவரை அவர்களைத் தடுக்க முயற்சி செய்வோம், ஆலோசனை வழங்குவோம், அதையும் மீறினால் கைது நடவடிக்கைக்கு வாய்ப்பு உள்ளது என ரயில்வே காவல்துறை கூடுதல் இயக்குநர் வனிதா தெரிவித்தார்.

மதுரை கோட்ட ரயில்வேவில் பணிபுரியும் காவலர்களுக்கான மனவழுத்தத்தை கையாளுதல், கலந்துரையாடல் நிகழ்ச்சி ரயில்வே மனமகிழ் மன்றத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ரயில்வே காவல்துறை கூடுதல் இயக்குநர் வனிதா, ரயில்வே காவலர்கள் மத்தியில் பணிச்சுமை உள்ளது. அதனால், மன அழுத்தம் அதிகரித்துக் காணப்படுகிறது எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், மதுரையில் தான் இந்த நிகழ்வுக்கு முதல் முறையாக ஏற்பாடு செய்துள்ளோம். காவலர்களின் கடமையைப் பேசும் பொழுது அவர்களின் உரிமைகளையும் பேசுவது அவசியம். காவல்துறையைப் போல ரயில்வேவிலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும். ரயில் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனக் கூறிய அவர், ஆப்ரேஷன் கஞ்சா மூலம் இதுவரை இல்லாத அளவிற்கு 88 கிலோ கஞ்சா மதுரை கோட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 220 கிலோ புகையிலை பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளோம். ஒடிசா ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்துதான் அதிக அளவிலான போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுகிறது. இவைகள் ரயில் மூலமாகவே பெரும்பாலும் கடத்தி வரப்படுகிறது என தெரிவித்தார்.

மேலும், PDS அரிசி கடத்தலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது எனத் தெரிவித்த அவர், ரயில் பயணிகளிடம் நகை பறிப்பு சம்பவங்கள் எதுவும் இல்லை. செல்போன் பறிப்பு அதிகரித்துக் காணப்படுகிறது. நாம் செய்யும் வேலையை மன நிறைவாகச் செய்ய வேண்டும். பணியின் போது யாருடனும் நம்மை ஒப்பிடக் கூடாது எனக் கூறினார். அப்போது, ரயில்வே பெண் காவலர்கள் பாதுகாப்பு குறித்து செய்தியாளர் கேட்டனர். அதற்குப் பதிலளித்த அவர், ரயில்வேவின் கூடுதல் இயக்குநரே நான்தான். நானும் ஒரு பெண் தான். பெண் காவலர்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அண்மைச் செய்தி: ‘புதுச்சேரி சட்டமன்றத்தில் பாஜக எம்எல்ஏக்கள் அரசு மீது சரமாரி குற்றச்சாட்டு; கூட்டணியில் விரிசல்?’

தொடர்ந்து பேசிய அவர், ரயில் பயணத்தின்போது கல்லூரி மாணவர்கள் தாக்கிக் கொள்வது சென்னையில் அதிகரித்து வருகிறது. முடிந்தவரை அவர்களைத் தடுக்க முயற்சி செய்வோம், ஆலோசனை வழங்குவோம், அதையும் மீறினால் கைது நடவடிக்கைக்கு வாய்ப்பு உள்ளது எனத் தெரிவித்தார். மேலும், மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மீட்பது என்பது எங்கள் முதன்மையான பணி. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் அவர்களை மீட்டு மறுவாழ்வுக்கு உறுதி செய்வோம் எனக் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.