மேற்காசிய நாடுகளில் நடைபெற்று வரும் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளது. இதனால் ஆசிய நாடுகளுக்கு கிடைக்கவேண்டிய கேஸ் சிலண்டர் மற்றும் கச்சா எண்ணெய் ஆகியவை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு வழங்கிய பேட்டியில் ”ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களின் நட்பு நாடுகளுக்குச் சொந்தமான கப்பல்களுக்கு மட்டுமே மூடப்பட்டுள்ளது. மற்ற நாட்டு கப்பல்களுக்கு திறந்துள்ளது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த வழித்தடத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று கப்பல்கள் முடிவு செய்கின்றனர். இதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று கூறியுள்ளார்.
முன்னதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி மூடல் முயற்சியால் பாதிக்கப்பட்ட நாடுகள், அமெரிக்காவுடன் இணைந்து ஜலசந்தியை திறந்து, பாதுகாப்பாக எண்ணெய் கப்பல்கள் கடந்து செல்ல போர்க்கப்பல்களை அனுப்பி வையுங்கள். இந்த செயற்கையான தடையால் பாதிக்கப்பட்ட சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, இங்கிலாந்து மற்றும் பிற நாடுகள், அப்பகுதிக்கு கப்பல்களை அனுப்பி ஈரானால் ஹார்முஸ் ஜலசந்தி இனி அச்சுறுத்தலாக அமையாதவாறு செய்வார்கள் என்று நம்புவோம்” என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் அதே நேரம் சீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் டிரம்பின் கோரிக்கையை நிராகரித்துள்ளன.







