பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் நிகரென கொள் விழிப்புணர்வு இயக்கத்தை நியூஸ் 7 தமிழ் மார்ச் மாதம் முழுவதும் முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு மாற்று தனியார் பள்ளிகளில் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்கப்பட்டது.
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நியூஸ் 7 தமிழ் சார்பில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ”நிகரென கொள்-2023” என்ற தலைப்பில் விழிப்புணர்வு இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாலின சமத்துவத்தை வலியுறுத்தி மார்ச் மாதம் முழுவதும் இந்த விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுக்கவுள்ள நியூஸ் 7 தமிழ், மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம், கருத்தரங்கம், உறுதிமொழி ஏற்பு போன்ற நிகழ்வுகளை நடத்துகிறது. இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நியூஸ் 7 தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் இயங்கி வரும் பள்ளிகள் மற்றும் உயர் அலுவலகங்களிலும் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் ‘நிகரென கொள்வோம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் உசிலம்பட்டியில் இயங்கி வரும் எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் 400-க்கும் அதிகமான மாணவ – மாணவர்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அளிக்க வலியுறுத்தி நடத்தப்படும் கையெழுத்து இயக்கத்திலும் கையொப்பமிட்டனர்.
இதேபோல், உசிலம்பட்டி அருகே எழுமலை பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் நியூஸ்7 தமிழ் முன்னெடுக்கும் நிகரென கொள் 2023 உறுதிமொழியை ஏற்றதோடு, மாதவிடாய் விடுமுறைக்கான கையெழுத்து இயக்கத்திலும் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.
நெல்லை மாவட்டம், பணகுடி திரு இருதய மெட்ரிக்குலேஷன் பள்ளியில், நியூஸ் 7 தமிழ் சார்பில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் நிகரென கொள்வோம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் முதல்வர் அருள் சகோதரர் ஜோசப் அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. முன்னதாக 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்றனர்.
மகாராஜபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நியூஸ்7 தமிழ் சார்பில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி , நிகரென கொள்வோம் என்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். அப்போது பாலின பாகுபாடுக்கு எதிராக சமத்துவத்தை வலியுறுத்தியும் , பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளுக்கு முழக்கமிட்டும், பெண்களை ஆணுக்கு நிகரென கொள்வோம் என்ற உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற மாதவிடாய் விடுமுறை கையெழுத்து இயக்கத்திலும் கலந்துகொண்டு பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் கையெழுத்திட்டனர். இந்த முயற்சியை முன்னெடுத்த நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகன் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.
இதேபோல் கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் நடந்த நிகழ்ச்சியில் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்பை கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் தொடங்கி வைத்தார். பின்னர் மாதவிடாய் விடுமுறை கையெழுத்து இயக்கத்தையும் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். பொதுமக்கள், தூய்மைப் பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என்று பலர் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை ஆயித்து 500க்கும் மேற்பட்டோர் இணையதளம் மூலமாகக் கையெழுத்திட்டுள்ளனர்.
மேலும் கரூரில் ஸ்ரீ விஜயலட்சுமி வித்தியாலயா இண்டர்நேஷனல் பள்ளியில், பாலின சமத்துவம் உறுதி மொழி ஏற்பு மற்றும் மாதவிடாய் விடுமுறை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. பள்ளியின் முதலவர் வினோதினி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டதோடு, பள்ளி மாணவ – மாணவிகள் கையெழுத்து இயக்கத்திலும் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.
பாலின சமத்துவத்தை வலியுறுத்தி நியூஸ்7 தமிழ் முன்னெடுத்துள்ள ’நிகரென கொள்’ இயக்கத்தில் தஞ்சாவூர் மாவட்டம். பட்டுக்கோட்டை பிருந்தாவனம் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் பங்கேற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் பிருந்தாவன பள்ளி இயக்குனர் ராஜமாணிக்கம் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில், நியூஸ் 7 தமிழ் செய்திகள் மகளிர் மேம்பாட்டிற்காக ஒரு முக்கியமான உறுதிமொழி மற்றும் கையெழுத்து இயக்கம் எடுத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்த பாலின சமத்துவ உறுதி மொழியை எடுத்த நியூஸ்7 தமிழுக்கு பள்ளியின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
- பி.ஜேம்ஸ் லிசா