நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்டம் மூக்கரைகல் பகுதியை சேர்ந்த பழங்குடி மாணவன் ஆனந்த் படிப்பு செலவை பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கவுசிக் ஏற்றார்.
எழில்கொஞ்சும் மலைக்கிராமான மூக்கரைக்கல், கன்னியாகுமரி மாவட்டம் மோதிரமலை அருகே உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த ஆதிகுடி மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கும், மருத்துவ உதவிகளுக்கும் சுமார் 15 கிலோமீட்டர் பயணம் செய்து பேச்சிப்பாறை பகுதிக்கோ அல்லது 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குலசேகரம் பகுதிக்கோ செல்ல வேண்டும்.
இதையும் படிக்கவும் : நாகை சிபிசிஎல் குழாய் உடைப்பு; 20 மணி நேர போராட்டத்திற்கு பின் சீரமைப்பு!
மூக்கரைசல் கிராமத்தைச் சேர்ந்த சாந்திக்கு இரு மகன்கள் உள்ளனர். ஏற்கனவே கணவர் உயிரிழந்துவிட்ட நிலையில், வீட்டுவேலை மற்றும் தையல் தொழில் செய்து வாழ்க்கை நடத்தி வந்த சாந்தி வறுமையிலும் மகன்களின் படிப்புக்கு முக்கியத்துவம் அளித்து வந்தார். இவரது மூத்தமகன் ஆனந்திற்கு 10 வயதில் திடீரென முதுகுத்தண்டுவட பாதிப்பு ஏற்பட்டது.
13 ஆண்டுகளாக தொடர்சிகிச்சை அளித்தும் பலனளிக்காத நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் திடீரென ஆனந்தின் கால்கள் செயலிழந்துவிட்டன. எப்படியாவது மகனை குணப்படுத்திவிட வேண்டும் என்கிற வைராக்கியத்துடன் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று சிகிச்சை வழங்கிப்பார்த்த சாந்தி இறுதியில் மூலக்கரைக் கல்லுக்கே மகனுடன் திரும்பிவிட்டார்.
சில மாதங்களுக்கு முன் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் காணி மக்கள் வசிக்கும் கிராமங்களை அப்போதைய மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மற்றும் பத்மநாதபுரம் சார்ஆட்சியர் கவுசிக் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது ஆனந்த் குறித்த தகவல் கிடைக்க, அடுத்த நாளே ஆனந்தை நேரில் சந்தித்த சார் ஆட்சியர் கவுசிக் அவரது மருத்துவக்குறிப்புகளை கேட்டுப்பெற்றுள்ளார்.
உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய அவர், ஆம்புலன்ஸ் மூலமாக ஆனந்தை அழைத்து வந்து நாகர்கோவிலில் உள்ள ஜெயசேகரன் மருத்துவமனையில் அனுமதித்து உரிய சிகிச்சைகள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டார். ஆனந்துக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை காரணமாக தற்போது அவர் எழுந்து நடக்கும் அளவிற்கு உடல்நலம் தேறியுள்ளார்.
ஏற்கனவே முதுகு தண்டுவட பாதிப்பால் இரு ஆண்டுகளாக படுக்கையில் இருந்த மாணவனை நேரில் சென்று மருத்துவ உதவி செய்து நடக்க வைத்த நிலையில் இரு ஆண்டுகள் படிப்பு நிறுத்தப்பட்டதாகவும் மேல் படிப்பு படிக்க வைக்க வசதி இல்லை என தாய் சாந்தி நியூஸ் 7 தமிழ் மூலம் கோரிக்கை வைத்த நிலையில் படிப்பு செலவை ஏற்பதாக சார் ஆட்சியர் நியூஸ் 7 தமிழிடம் உறுதியளித்துள்ளார்.









