மன்னிப்பு கேட்கும் அளவுக்கு லண்டனில் இந்தியாவுக்கு எதிராக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.
அண்மையில் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இங்கிலாந்து சென்றிருந்தார். அங்கு கருத்தரங்கில் பேசிய ராகுல் காந்தி , இந்திய ஜனநாயகம் அழுத்தம் மற்றும் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவித்தார். இந்திய ஜனநாயக அமைப்புகள் முழுமையான தாக்குதலுக்கு ஆளாகியிருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். அவரது இந்த பேச்சு வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை அவதூறகாக பேசும் செயல் என்றும், வெளிநாடுகளின் தலையீட்டை நாடுவதாகவும் விமர்சித்த பாஜக, இதற்காக ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், இப்பிரச்னை காரணமாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடக்கப்பட்டு வருகின்றன. பாஜகவின் இந்த செயல்பாட்டிற்கு , கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் ஆகியோர் ராகுல் காந்தி தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்கும் கேள்விக்கே இடமில்லை என்று கூறி இருந்தனர்.
இந்நிலையில் பரபரப்பான அரசியல் சூழலில் இன்று நாடாளுமன்றம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, தமது லண்டன் பேச்சு குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் இந்தியாவுக்கு எதிராக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை, தமக்கு அனுமதி அளிக்கப்பட்டால் நாடாளுமன்றத்தில் பேச தயாராக இருப்பதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா