நீட் தேர்வு, நாடு முழுவதும் செப்டம்பர் 12ம் தேதி நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், நீட் தேர்வு எழுதும் மாணவர்கள், தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு 155 நகரங்களில் தேர்வு நடைபெற்ற நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நடப்பாண்டில் 198 நகரங்களில் நீட் தேர்வு நடத்தப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்வு மையங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரிக்கப்படும் என்றும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்வு நடத்தப்படும் என்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் இணையதளத்தில் பதிவு செய்ததால் சிறிது நேரம் இணையதளத்தில் நெட்வொர்க் பிரச்னை மேலெழுந்தது. இதனையடுத்து பிரச்னை சரிசெய்யப்பட்டது.
https://twitter.com/dpradhanbjp/status/1414979349342679046
இதன் தொடர்ச்சியாக மத்திய கிழக்கு நாடுகளின் உள்ள இந்திய மாணவர்களுக்காக குவைத்தில் ஒரு நீட் தேர்வு மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் நீட் தேர்வு, ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட 11 மொழிகளில் நடத்தப்பட்ட நிலையில் தற்போது பஞ்சாபி மற்றும் மலையாளம் கூடுதலாக இரு மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளது.
இதனால் மொத்தம் 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெறும் என்றும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.







