நடராஜனின் ஒற்றைக் கனவு நனவானது… – சின்னப்பம்பட்டியில் கிரிக்கெட் மைதானம் தயார்!!

கிரிக்கெட் வீரர் நடராஜன், தனது சொந்த கிராமத்தில் உருவாக்கியுள்ள ’நடராஜன் கிரிக்கெட் மைதானம்’ விரைவில் விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது. இந்திய கிரிக்கெட் உலகில் தனது கடின உழைப்பால் அறிமுகமானவர் தங்கராசு நடராஜன்.…

கிரிக்கெட் வீரர் நடராஜன், தனது சொந்த கிராமத்தில் உருவாக்கியுள்ள ’நடராஜன் கிரிக்கெட் மைதானம்’ விரைவில் விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது.

இந்திய கிரிக்கெட் உலகில் தனது கடின உழைப்பால் அறிமுகமானவர் தங்கராசு நடராஜன். இடது கை வேகப்பந்து வீச்சாளராக கலக்கி வரும் இவர், ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பிரபலமானார். யார்க்கர் போடுவதில் வல்லவரான இவர் மற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் தயக்கம் காட்டுவதில்லை.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த நடராஜன், தனது சொந்த கிராமமான சின்னப்பம்பட்டியில் கிரிக்கெட் மைதானம் ஒன்றை உருவாக்கி, அதில் கிரிக்கெட் அகாடமியை தொடங்க முயற்சிகளை மேற்கொண்டார். தானே களத்தில் இறங்கி அதற்கான பணிகளையும் செய்து வந்தார்.

நடராஜன் தனது “கனவு திட்டம்” என்று குறிப்பிடும் இந்த மைதானத்தில், நான்கு செண்டர் பிட்ச்சுகள், இரண்டு பயிற்சி தடங்கள், ஜிம், கேண்டீன் மற்றும் 100 பார்வையாளர்கள் தங்கக்கூடிய ஒரு மினி கேலரி ஆகியவை இடம்பெற்றுள்ளன. இவரது கிரிக்கெட் அகாடமி மூலம் திறமையுள்ள, கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுள்ள இளைஞர்களை அதிகம் உருவாக்க முடியும் என்று நடராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இங்கு இலவச பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது.

https://twitter.com/Natarajan_91/status/1656664027098128389?t=hc9jGszr8psUjbdrMlQSjQ&s=19

நடராஜன் கிரிக்கெட் மைதானம் முழுமையாக தயாராகியுள்ளதை அடுத்து, விரைவில் கிரிக்கெட் வீரர்கள் பயன்படுத்தும் வகையில் மைதானமானது திறக்கப்படும் என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.