டெல்லி – காஜியாபாத் – மீரட் இடையே பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கும் அதிவிரைவு ரயிலின் (ஆர்ஆர்டிஎஸ்) பெயர் ‘நமோ பாரத்’ என மாற்றப்பட்டுள்ளது.
மாநில நகரங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்தை நவீனமயப்படுத்த இந்தத் திட்டத்தை பிரதமர் மோடி 2019-ம் ஆண்டு தொடங்கி வைத்தார். டெல்லி – காஜியாபாத் – மீரட்டுக்கு இடையேயான 17 கி.மீ. தொலைவு வழித்தடத்தில் ஷாஹிபாபாத், காஜியாபாத், குல்தார், துஹாய், துஹாய் டிபோட் ஆகிய ரயில் நிலையங்கள் உள்ளன. உலகத் தரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த ரயில் நிலையங்களில் 15 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும். அதிகபட்சமாக 180 கி.மீ. வேகத்தில் செல்லும் வகையில் இந்த ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பயணிகளின் வருகைக்கு ஏற்ப 5 நிமிட இடைவெளியில் ஒரு ரயிலை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரூ.30,000 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை பானிபட் வரையில் நீட்டிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
காங்கிரஸ் கண்டனம்
இந்தப் பெயர் மாற்றத்துக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் (எக்ஸ்) பதிவில், ”கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு பிரதமர் மோடியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போது ரயிலுக்கு நமோ பாரத் சூட்டப்பட்டுள்ளது. அவரின் சுயவிளம்பர தொல்லைக்கு அளவே இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.







