நாகாலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம்; ராணுவ வீரர்களிடம் ஆய்வு நடத்த அனுமதி

நாகாலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து வீரர்களிடம் ஆய்வு மேற்கொள்ள சிறப்பு விசாரணை குழுவுக்கு ராணுவம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 4ம் தேதி நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டம் ஊட்டிங் பகுதியில் நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிந்து…

நாகாலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து வீரர்களிடம் ஆய்வு மேற்கொள்ள சிறப்பு விசாரணை குழுவுக்கு ராணுவம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 4ம் தேதி நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டம் ஊட்டிங் பகுதியில் நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிந்து விட்டு, திரும்பிய தொழிலாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

சுரங்கத் தொழிலாளர்களை “நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில்” அமைப்பை சேர்ந்த பிரிவினைவாதிகள் எனக் கருதி, அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ராணுவம் தரப்பில் கூறப்பட்டது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் மக்கள் நடத்திய பதில் தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நாடாளுமன்றத்தில் இது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கமளித்தார். இதனையடுத்து இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது.

துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட வீரர்களிடம் ஆய்வு மேற்கொள்ளவும் வாக்குமூலம் பதிவு செய்யவும் சிறப்பு விசாரணை குழுவுக்கு ராணுவம் அனுமதி வழங்கியுள்ளது.

இதனால் 21 துணை ராணுவ வீரர்களிடம் வாக்குமூலங்களை இந்த வாரத்திற்குள் விசாரணைக்குழு பதிவு செய்து முடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இந்த வாக்குமூலங்களில் தெளிவு ஏதும் இல்லையெனில், விசாரணை மேற்கொள்ளவும், ராணுவம் தரப்பில் அறிக்கை சமர்ப்பிக்கவும் விசாரணைக்குழு கோரும்.

8 அதிகாரிகளுடன் தொடங்கிய இந்த நாகாலாந்து சிறப்பு விசாரணைக் குழுவானது தற்போது 22 அதிகாரிகள் கொண்ட குழுவாக விரிவாக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய காவல்துறையை சேர்ந்த 5 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழு 7 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தையடுத்து ஏற்பட்ட கலவரம்

மறுபுறத்தில் ராணுவ நீதிமன்றத்தின் தனிக்குழுவும் இந்த சம்பவத்தின் மீதான விசாரணையை ஏற்கெனவே தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.