சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை சமாளிக்க கூடுதல் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக் நகரில் ஒரே தெருவைச் சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அப்பகுதியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறினார்.
சென்னையில் 3 இடங்களில் கொரோனா கேர் சென்டர்கள் அமைக்கப்பட்டு 500 படுக்கைகள் தயாராக உள்ளதாகவும் நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையம், மீண்டும் கொரோனா பாதுகாப்பு மையமாக மாற்றப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் மேலும் 129 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஒமிக்ரான் தொற்றால் அதிகளவில் பாதிப்பில்லை என்பதால் மக்கள் அச்சப்பட வேண்டாம் என தெரிவித்தார்.
மேலும், மாவட்ட வாரியாக பள்ளிகளில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், பள்ளிக்கே சென்று மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த முடிவு செய்துள்ளதாகவும் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.








