காங்கிரஸ் கட்சி தம்மை வலுப்படுத்திக்கொள்ள அரசியல் வித்தகர் பிரசாந்த் கிஷோர் போன்றோரை இணைக்கும் முயற்சியில் இறங்கியது. அதற்கு கைமேல் பலனில்லை என்றாலும், இதை பார்த்து சுதாரித்த பாஜக, மக்களவைத் தேர்தலுக்கு இன்னமும் இரண்டு ஆண்டுகளே உள்ளநிலையில், மோடி ஒன்ஸ்மோர் என்ற பிரச்சார ஸ்லோகனை கையில் எடுத்துள்ளது.
ஜெர்மன் நாட்டிற்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டின் தலைநகர் பெர்லின் இந்தியர்களை சந்தித்தார். அப்போது, அவரே மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நோக்கில், மோடி ஒன்ஸ்மோர் என அரங்கில் இருந்தவர்கள் தொடர்ந்து கோஷமிட்டனர். இதுகுறித்த பாஜக தரப்பில் விசாரித்தபோது, கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், அப்போது காங்கிரஸ் தலைமையில் இருந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கில், ஆப்கி பார் மோடி சர்க்கார் (இந்த முறை மோடி ஆட்சி) என்ற ஸ்லோகன் முன் வைக்கப்பட்டது. இதற்கு வட இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக மோடி தலைமையில் என்டிஏ ஆட்சிக்கு வந்தது. அதற்கு அடுத்த மக்களவைத்தேர்தலில், சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஷ் என்பது எல்லோருடன் இணைந்து, எல்லோருக்கான அரசு என்ற கோஷத்தை முன் வைத்து பிரச்சாரத்தை மேற்கொண்டோம். அதனை முழுமையாக ஏற்றுக்கொண்ட மக்கள், எங்களது கூட்டணிக்கு வாக்களித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இப்போது ஜெர்மனி சென்றுள்ள பிரதமரை நேரில் பார்த்தவுடன், அங்குள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் எங்களுக்கான பிரச்சாரத்தை அவர்களை தொடங்கி விட்டனர். அதனுடைய வெளிப்பாடே மோடி ஒன்ஸ் மோர் என்பதாகும் என்றனர்.
பாஜக தேர்தலுக்கு இப்போதே தயாராகிவிட்ட சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியின் திட்டம் என்ன என்பதை அவர்களிடம் கேட்டதற்கு, மக்களவை தேர்தலுக்கு முன்னர் தெலுங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு எங்கள் செல்வாக்கை நிரூபித்து தெற்கில் இருந்து எங்களது தேர்தல் வெற்றி பயணம் தொடரும் என தெரிவித்தனர். காங்கிரஸை பொறுத்தவரை பூத் கமிட்டிகளை வலிமைப்படுத்துவதை தீவிரப்படுத்தியுள்ளதாகவும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, நாடு முழுவதும் தொடரும் மின்வெட்டு பிரச்சனை போன்றவற்றை மக்களிடையே எடுத்து செல்வோம். பவர் கட் மோடி என்பதே எங்களது பிரதான பிரச்சாரமாக இருக்கும் என காங்கிரஸார் தெரிவிக்கின்றனர்.