மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் 2026-27-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில் பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. இதனை தொடர்ந்து பட்ஜெட் 2026 குறித்து அரசியல் தலைவர்கள் வெளியிட்டுள்ள கருத்துகளை பார்ப்போம்.
பிரதமர் மோடி : மத்திய பட்ஜெட் 140 கோடி இந்தியர்களின் லட்சியங்களைப் பிரதிபலிக்கிறது. இது சீர்திருத்தப் பயணத்தை வலுப்படுத்துவதுடன், வளர்ந்த இந்தியாவிற்கான ஒரு தெளிவான செயல் திட்டத்தையும் வகுக்கிறது.
மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி : வேலையில்லாத இளைஞர்கள், உற்பத்தி வீழ்ச்சி, முதலீட்டாளர்கள் மூலதனத்தை வெளியே இழுத்தல், வீட்டு சேமிப்பு வீழ்ச்சி, துயரத்தில் விவசாயிகள், உலகளாவிய அதிர்ச்சிகள் ஆகிய அனைத்தும் புறக்கணிக்கபட்டுள்ளன. இந்த பட்ஜெட்டானது இந்தியாவின் உண்மையான நெருக்கடிகளைக் கண்டும் காணாமல், பாதையைத் திருத்த மறுக்கிறது.
பாஜக தேசிய தலைவர் நிதின் நிபின் : மத்திய பட்ஜெட் 2026 ஆனது இளைஞர்களால் உந்தப்பட்ட பட்ஜெட். இது உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் உற்பத்திப் பிரிவுகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மீது கவனம் செலுத்தி, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. இந்த வரவுசெலவுத் திட்டம் மகாத்மா காந்தியின் கிராம சுயராஜ்யம் என்ற தொலைநோக்குப் பார்வையையும் பிரதிபலிக்கிறது.
தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் சமர்ப்பித்த 2026-27-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டின் நலன் முற்றிலுமாகப் புறகணிக்கப்பட்டுள்ளதோடு, ஏழைகள் விவசாயிகள் –பெண்கள் -விளிம்பு நிலை மக்கள் என எந்தப் பிரிவினருக்கும் நன்மை பயக்கும் முக்கியத் திட்டங்கள் இதில் இடம்பெறவில்லை.
அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி : மத்திய நிதிநிலை அறிக்கையானது இந்தியாவின் வளர்ச்சிக்கு வழி வகுப்பதோடு, உலக அளவில் இந்தியா பொருளாதார நிலையில் வலுவான நாடாக உயர்வதற்கு வழிவகுக்கும்.
கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் : 2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கேரளா மீதான விரோதப் போக்கை வெளிப்படையாக அறிவிக்கிறது. MGNREGS நிதியைக் குறைத்து, ‘அரிய மண் தாழ்வாரங்கள்’ வழியாக தனியார் சுரங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பது நமது இறையாண்மை மற்றும் கூட்டாட்சி மதிப்புகளுக்கு எதிரான ஒரு கொடிய தாக்குதலாகும்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி : இந்த பட்ஜெட் தொலைநோக்கு பார்வையற்றது மற்றும் மக்கள் விரோதமானது. இது பெண்கள், விவசாயிகள் கல்வி ஆகியவற்றிற்கும் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிக்கு ஆகியோருக்கும் எதிரானது. பட்ஜெட்டில் வங்காளத்திற்கு எதுவும் வழங்கப்படவில்லை. வரவிருக்கும் தேர்தலில் பாஜக தோல்வியை சந்திப்பார்கள், அதனால்தான் அவர்கள் மேற்கு வங்கத்தை அரசியல் ரீதியாக அல்லாமல் நிதி ரீதியாகப் பறிக்க விரும்புகிறார்கள். பட்ஜெட்டில் பொது மக்களுக்கும் சமூகப் பாதுகாப்பிற்கும் எதுவும் இல்லை.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் : 2026-27ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. நாடு முழுவதும் வேலைவாய்ப்புகளையும், பணப்புழக்கத்தையும் அதிகரிக்கும் வகையில் நடப்பாண்டில் மூலதனச் செலவுகளுக்கான ஒதுக்கீடு சுமார் 10% உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது ஆகும்.
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ; 2026-27 பட்ஜெட், ஏழைகள், விவசாயிகள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், மீனவர்கள், சிறு வணிகங்கள் மற்றும் தொழில்துறை என சமூகத்தின் ஒவ்வொரு பிரிவையும் தொடும் ஒரு விரிவான சாலை வரைபடமாக மாறுகிறது. இது மக்களை மையமாகக் கொண்ட, சீர்திருத்தம் சார்ந்த, வாழ்க்கை முறையை எளிதாக்கும் பட்ஜெட் ஆகும், இது நிதி ரீதியாக விவேகமான, நம்பிக்கையான மற்றும் உள்ளடக்கிய விக்ஸித் பாரதத்தின் அடித்தளத்தை வலுப்படுத்துகிறது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ : கல்வி, சுகாதாரத்திற்கான டிடிஎஸ் 5 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக குறைக்கப்பட்டு இருப்பது, வாகன விபத்து இழப்பீட்டிற்கான வரி விலக்கு, புற்றுநோய் சிகிச்சைக்கு 17 மருந்து வகைகளுக்கு அடிப்படை சுங்க வரியில் இருந்து விலக்கு, ஏழு அரிய வகை நோய்களுக்கு மருந்து இறக்குமதி வரி குறைப்பு போன்ற வரவேற்கத்தக்க கூறுகள் இருந்தாலும், ஒன்றிய வரவு செலவுத் திட்ட அறிக்கை மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதாக இல்லை; ஏமாற்றத்தையே தருகிறது.
தேமுதிக பொதுச்செயளாலர் பிரேமலதா விஜயகாந்த் : நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் பிரத்யேக சரக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டம் வரவேற்கத்தக்கது. கடல் வழி போக்குவரத்து, வணிகம், மீன்வள வளர்ச்சி மற்றும் துறைமுக சேவைகள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் ஏதும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறதாது ஏமாற்றமளிக்கின்றது. ஜிஎஸ்டி போன்ற வரிகளை குறைத்து, மக்களுக்கு சுமையில்லாத, வலி இல்லாத ஒரு பட்ஜெட்டாக இருந்திருக்கலாம்.







