அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு: வைகோ வலியுறுத்தல்

அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுகாதாரத் துறையில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் தமிழகம் திகழ்வதற்கு அரசு…

அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுகாதாரத் துறையில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் தமிழகம் திகழ்வதற்கு அரசு மருத்துவர்களின் பங்களிப்பு மிக முக்கியக் காரணியாக இருக்கிறது. பல மாநிலங்களில் இன்னும் கிராமப்புறங்களில் மருத்துவர் இருப்பை உறுதி செய்வதே சவாலாக இருக்கும்போது, தமிழ்நாட்டின் கிராமப்புற சுகாதாரக் கட்டமைப்பு இந்தியாவிலேயே முதல் இடத்தில் உள்ளது. இதற்கு, அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையும், உழைப்புமே காரணம் ஆகும்.

கொரோனா பேரிடர் காலத்தில் நெருக்கடியான சூழலில் அரசு இயந்திரத்திற்கு மிகவும் உதவிகரமாக இருந்தவர்கள் அரசு மருத்துவர்கள் தான். தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாது இக்கட்டான சூழலில் பணியாற்றி வரும் அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வுக்காக பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றானர். கர்நாடகா உள்ளிட்ட மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்களின் ஊதியம் குறைவு தான்.

கடந்த 2019ஆம் ஆண்டு, அக்டோபர் மாத இறுதியில் அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம் இருந்தபோது, அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்ததோடு, திமுக ஆட்சி அமைத்தவுடன் அரசு மருத்துவர்களின் ஊதிய கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தார்.

தற்போது திமுகவின் பொற்கால ஆட்சி நடைபெற்று வருகின்றது. மாவட்டத்திற்கு ஒரு அரசு மருத்துவக் கல்லூரி என்ற இலக்கை எட்டுவதற்கும், தமிழ்நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பை சர்வதேச தரத்துக்கு உயர்த்தவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சித்து வரும் சூழலில், அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையையும் பரிசீலிக்க வேண்டும்.

நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரில், சுகாதாரத் துறை மானிய கோரிக்கையின்போது, அரசு மருத்துவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஊதிய உயர்வு குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை.

2009ஆம் ஆண்டில், கலைஞர் ஆட்சியில் போடப்பட்ட அரசாணை 354 இன் படி நடப்பு கூட்டத் தொடரிலேயே ஊதிய உயர்வு அறிவிப்பை வெளியிட்டு அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றித் தருமாறு முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.