போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பான அபராதத்தை தபால் நிலையங்கள் உள்ளிட்ட 5 வகைகளில் செலுத்தலாம்.. அது எப்படி என்று பார்ப்போம்.
தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதி மீறல்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகை பலமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அபராத தொகை அனைத்துமே ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு முதல் “கேஷ் லெஸ்” என்ற முறைப்படி நேரடியாக அபராத தொகையை போக்குவரத்து போலீசார் வசூலிக்காமல் ஆன்லைன் மூலம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. 
அபராத தொகையை 5 வகைகளில் செலுத்த வழிவகை செய்யப்பட்டுளது. அதன்படி அபராத தொகைக்கான எஸ்எம்எஸ் நமக்கு வந்ததும் தபால் நிலையத்திற்கு சென்று அபராத தொகையை செலுத்தலாம். இதேபோல பேடிஎம் கியூஆர்கோடு முறையிலும், பாரத் ஸ்டேட் வங்கி டெபிட் கார்டு மற்றும் ஸ்டேட் பேங்க் இ பேமெண்ட் முறை, இசெலான் கருவியேலேயே ஸ்வைப் மூலம் அபராதம் செலுத்தலாம் என 5 வகையில் அபராத தொகையை போக்குவரத்து காவல்துறை வசூலித்து வருகிறது.
போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்ததும் இந்த தகவல்கள் நீதிமன்ற சர்வரில் பதிவாகி விடும். வாகன ஓட்டி அபராத தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தியதும் அந்த தகவல் உயர்நீதிமன்ற சர்வரிலும் பதிவாகி விடுகிறது. ஆன்லைன் மூலம் செலுத்தியதற்கான தகவல் செல்போனுக்கு எஸ்எம்எஸ் வந்து விடும். அந்த எஸ்எம்எஸ் காட்டிய பிறகே பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை காவல் நிலையத்தில் பெற முடியும். 
போக்குவரத்து காவல்துறை வசூலிக்கும் அபராத தொகையில் குறிப்பிட்ட சதவீதத்தை ஆண்டுதோறும் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், சாலை சீரமைப்பு பணிகளுக்கு ஒதுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- சிவ செல்லையா







