ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நடக்கும் குளறுபடிகளை ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: ஈரோடு இடைத்தேர்தல் குளறுபடிகள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். இதுகுறித்து மத்திய தேர்தல் ஆணையம், மாநிலத்தேர்தல் ஆணையம், மாவட்ட ஆட்சித்தலைவர், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்துள்ளோம்.
வாக்காளர்களை நேரடியாக சென்று வாக்கு சேகரிப்பதற்கு பதிலாக, அவர்களை அழைத்து சென்று சாமியானா போட்டு காலை முதல் இரவு வரை அங்கேயே அமர வைத்தால் மற்ற வேட்பாளர்கள் எப்படி சென்று வாக்கு கேட்கமுடியும். 120 இடங்களில் சாமியான அமைத்து ஒவ்வொரு இடத்திலும் ஆயிரம் பேர் அமரவைக்கபட்டுள்ளனர். இதில் தேர்தல் விதிகள் மீறப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத மாதிரி் தமிழகத்தில் இடைத்தேர்தலில் ஏழை மக்களுக்கு ஆசைகாட்டி, அவர்களை அழைத்துச்சென்று, வாக்களர்களை ஆடுமாடுகளை போல் அடைத்து வைப்பது ஜனநாயக படுகொலை. இது முழுக்க முழுக்க விதிமீறல்.
ஒரு நாட்டின் முதலமைச்சர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பொதுமக்களை, சட்ட ஒழுங்கை காக்கக்கூடிய முதலமைச்சர், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள் இது போன்ற செயல்களை செய்வது கண்டிக்கத்தக்கது.
வாக்காளர்கள் ஓட்டு போட்டுதான் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று முடிவு செய்யப்படும், ஸ்டாலின் ஓட்டு போடுவதில்லை. மக்கள் எந்த தீர்ப்பு கொடுப்பார்கள் என்று தேர்தல் முடிவுக்கு பின்தான் தெரியவரும். ஈரோடு இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுமா இல்லையா என்று நான் எப்படி சொல்ல முடியும்.
அண்மைச் செய்தி: ஈரோடு இடைத்தேர்தலை நிறுத்தக் கோரி சுயேட்சை வேட்பாளர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்கள் எழுச்சியோடு இருக்கின்றனர். ஈரோடு இடைத்தேர்தலில் பிரம்மாண்டமாக அவர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிமுக வேட்பாளர் கட்டாயம் வெற்றி பெறுவார். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.







