ஈரோடு கிழக்குத் தொகுதியில் நாளை மாலை முதல் வாக்குப் பதிவு முடியும் வரை பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியின் இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு பிப்ரவரி 27 அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். பிப்ரவரி 25ஆம் தேதி மாலை 6 மணி முதல் வாக்குப் பதிவு முடியும் வரை பின்வரும் விதிமுறைகள் செயலில் இருக்கும்.
தேர்தல் தொடர்பான பொதுக் கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ, அவற்றில் பங்கேற்கவோ கூடாது.
எந்தவொரு தேர்தல் விவகாரத்தையும் திரைப்படம், தொலைக்காட்சி, எஃப்எம் ரேடியோ வாட்ஸ்அப், முகநூல், ட்விட்டர் போன்ற அல்லது இதுபோன்ற சாதனம் வாயிலாக பொதுமக்களின் பார்வைக்கு வைக்க கூடாது. மெசேஜ் மற்றும் மின்னணு வடிவிலான தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும்
மக்களை ஈர்க்கும் வகையில், இசைநிகழ்ச்சி, திரையரங்கச் செயல்பாடு, பிற கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதன் மூலம் பரப்புரை செய்யக் கூடாது. மீறினால் 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
தொகுதிக்கு வெளியில் இருந்து வந்த அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் பிப்ரவரி 25ஆம் தேதி மாலை 6 மணிக்குள் தொகுதிக்குள் இருந்து வெளியேற வேண்டும்.
திருமண மண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் தங்கியுள்ளனரா என கண்டறியப்படும்.
வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உட்பட வாகன அனுமதிகள் பிப்ரவரி 25ஆம் தேதி மாலை 6 மணி முதல் செயல்திறனற்றதாகிவிடும்.
ஒவ்வொரு வேட்பாளருக்கும் வாக்குப் பதிவு நாளன்று வாகன அனுமதி பின்வருமாறு: அவரது சொந்த பயன்பாட்டிற்கான ஒரு வாகனம், தேர்தல் முகவரின் பயன்பாட்டிற்கான ஒரு வாகனம், கூடுதலாக அவரது பணியாளர்கள் அல்லது கட்சிப் பணியாளர்களின் பயன்பாட்டிற்கான ஒரு வாகனம்.
வாகனங்களை வாக்குச் சாவடிக்கு அழைத்து வருவதற்கும், வாக்குச் சாவடிகளில் இருந்து அழைத்துச் செல்வதற்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகை எடுப்பதற்கு அல்லது வாங்குவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு எந்தவொரு வேட்பாளரும் அனுமதிக்க கூடாது.
இரண்டு நபர்களை மட்டுமே கொண்ட வேட்பாளரின் அரசியல் கட்சிகளின் தற்காலிக பிரசார அலுவலகம் வாக்குச் சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் அமைக்கப்படலாம்.
பிப்ரவரி 25 அன்று மாலை 6 மணி முதல் ஏதேனும் கருத்துக் கணிப்பு அல்லது பிற வாக்குப் பதிவு ஆய்வு முடிவுகள் உட்பட எந்தவொரு தேர்தல் விவகாரங்களையும் மின்னணு ஊடகத்தில் காட்சிப்படுத்துவது தடை விதிக்கப்படுகிறது.
-ம.பவித்ரா








