’’திமுகவுடன் மதிமுகவை இணைக்க வேண்டும்’’ – காத்திருக்கும் திருப்பூர் துரைசாமி…. என்ன சொல்லப்போகிறார் வைகோ?

மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என்று மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தெரிவித்திருக்கும் கருத்தால், அக்கட்சியில் அடுத்து என்ன நடக்கும்..? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்… தொண்டர்களைக் கவரும் பேச்சாளராக, மாணவரணி,…

மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என்று மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தெரிவித்திருக்கும் கருத்தால், அக்கட்சியில் அடுத்து என்ன நடக்கும்..? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்…

தொண்டர்களைக் கவரும் பேச்சாளராக, மாணவரணி, இளைஞரணி நிர்வாகியாக இருந்து திமுகவில் தொண்டரணியை உருவாக்கி, அதன் தலைவராக, நான்கு முறை தொண்டர்படை பயிற்சி முகாம்களை நடத்தியவராக, மாநிலங்களவை உறுப்பினராக, இரண்டாம் கட்ட தலைவராக இருந்த வைகோ,  திமுகவின்  தலைவராக இருந்த மு.கருணாநிதியோடு ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால், 1993ம் ஆண்டு நவம்பர் மாதம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அவரோடு 9 மாவட்டச் செயலாளர்கள், 400க்கும் மேற்பட்ட பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களும் சேர்ந்து, நாங்கள்தான் உண்மையான திமுக என்றனர்.

எம்.ஜி.ஆருக்கு பின்னர் 2வது முறையாக பிளவை, இந்த முறை செங்குத்து பிளவு என்று சொல்லும் வகையில் பெரும் பிளவை திமுக சந்தித்தது. இடிமழை உதயன், நொச்சிப்பட்டி தண்டபாணி, மேலப்பளையம் ஜஹாங்கீர், காமராசபுரம் பாலன், உப்பிலியாபுரம் வீரப்பன் ஆகியோர் வைகோ நீக்கத்தை எதிர்த்து உயிர்த்தியாகம் செய்தனர். உணர்ச்சி பெருக்கு, தலைவர்களின் ஆதரவுக்கு மத்தியில் 1994ம் ஆண்டு மே 6ம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை வைகோ தொடங்கினார். திமுக என்கிற கட்சி, கொடி, அறிவாலயத்தை தக்க வைத்துக்கொண்டார் கருணாநிதி.

இளைஞர்களை ஈர்த்த மதிமுக

அன்றைய காலகட்டத்தில் மதிமுகவில் இளைஞர்கள் பெருமளவில் சேர்ந்தனர். வைகோ கட்சியைத் தொடங்கிய 2 ஆண்டுகளுக்குள் 1996ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் வந்தது. அப்போது ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் மக்கள் ஜனநாயக முன்னணி என்று கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தார் வைகோ. ஜனதா ஒரு இடத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வென்றாலும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வைகோ உள்ளிட்ட பலர் தோற்று, ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ஆனாலும் பல இடங்களில் பெருவாரியான வாக்கைப் பெற்றனர்.

அந்த தேர்தலில், ஜெயலலிதா மீதான கடுமையான எதிர்ப்பலை, மூப்பனாரின் தமாகா உதயம், ரஜினிகாந்த்தின் ஆதரவு உள்ளிட்டவற்றால், திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் மதிமுக கூட்டணி படுதோல்வியடைந்தது. இதையடுத்து, திமுக, அதிமுகவிற்கு மாற்றாக மதிமுக வளர்கிறது என்று பேசப்பட்ட நிலையில், 1998ம் ஆண்டு மக்களவைப் பொதுத் தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியில் மதிமுக போட்டியிட்டு 3 இடங்களில் வெற்றியும் பெற்றது. வைகோ முதல் முறையாக மக்களவைக்கு சென்றார். ஓராண்டில், பாஜக தலைமையிலான ஆட்சி, அதிமுக எதிர்ப்பால் கவிழ்ந்தது.

திமுக கூட்டணியில் மதிமுக

இதையடுத்து 1999ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக, திமுக கூட்டணியில் மதிமுகவும் இடம்பெற்றது. 4 எம்.பிக்களையும் பெற்று, செஞ்சி ராமச்சந்திரன், மு.கண்ணப்பன் இருவரும் மத்திய இணை அமைச்சர்களானார்கள். பிரதமராக இருந்த வாஜ்பாய் வற்புறுத்தியும் காபினட் அமைச்சர் பதவியை வேண்டாம் என்று தவிர்த்து விட்டார் வைகோ என்றார்கள். இதையடுத்து 2001ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மதிமுக மீண்டும் ஒரு தோல்வியைச் சந்தித்தது.

கடந்த 2002ம் ஆண்டு மதுரை திருமங்கலத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய வைகோ, ‘விடுதலைப்புலிகளை நேற்றும் ஆதரித்தேன், இன்றும் ஆதரிக்கிறேன், நாளையும் ஆதரிப்பேன்’ என்றார். இதையடுத்து, தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக பேசியதாக வைகோ, கணேசமூர்த்தி, பூமிநாதன் உள்ளிட்ட 9 பேர் ‘பொடா’ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். பிணை வேண்டாம் என்று 19 மாதங்கள் சிறையில் இருந்தார். முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி நேரில் சென்று வலியுறுத்தியதின் பேரில் பிணையில் வெளியில் வந்தார்.

அப்போது நடைபெற்ற 2004ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மீண்டும் திமுக கூட்டணியான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணைந்தது மதிமுக. மீண்டும் 4 எம்.பிக்கள் மதிமுகவிற்கு கிடைத்தனர். இந்த தேர்தலில் தமிழ்நாடு முழுக்க பிரச்சாரம் செய்த வைகோ, உறுதியாக வெல்லும் வாய்ப்பு இருந்தும் போட்டியிடவில்லை. சிவகாசியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்கிற இளைஞருக்கு வாய்ப்பு கொடுத்தார். வைகோவின் இந்த முடிவு வரவேற்பையும் எதிர்ப்பையும் சமமாக பெற்றது.

மீண்டும் அதிமுக, திமுக கூட்டணி

திமுக கூட்டணியில் இருந்த மதிமுக, 2006ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் பேசிக்கொண்டிருந்த நிலையில், திடீரென ஜெயலலிதாவைச் சந்தித்து அதிமுகவுடன் கூட்டணி வைத்தார். திமுகவினர் கடுமையாக வைகோவை விமர்சித்தனர். குறிப்பாக, திருச்சி திமுக மாநாட்டில் வைக்கப்பட்டிருந்த வைகோவின் கட் அவுட்டை திமுக தொண்டர்கள் உடைத்து நொறுக்கினர்.

அந்த தேர்தலில் 35 இடங்களில் போட்டியிட்டு 6 எம்.எல்.ஏக்களைப் பெற்றது மதிமுக. முதல்முறையாக மதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு சென்றனர். தொடர்ந்து, 2009 மக்களவைத் தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் மதிமுக போட்டியிட்டது. ஆனால், அதிமுகவுடனான தொகுப்பங்கீட்டுப் பிரச்சினையால், 2011 சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணித்தது.

திராவிட இயக்க போர்வாள்

இதையடுத்து திமுக, அதிமுக இரண்டு கூட்டணியிலும் இல்லாமல், 2014ம் ஆண்டு பாஜக கூட்டணியில் மதிமுக 7 இடங்களில் போட்டியிட்டது. மதிமுக வெற்றி பெறவில்லை என்றாலும் பாஜக ஆட்சி அமைந்தது. ஆனாலும், ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு உள்ளிட்ட காரணங்களால் கூட்டணியில் இருந்து மதிமுக விலகியது.

இதையடுத்து 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக, தமாக, கம்யூனிஸ்டுகள், விசிக ஆகிய கட்சிகளுடன் மக்கள் நலக் கூட்டணியை வைகோ கட்டமைத்தார். இதைத் தொடர்ந்து, 2019 -ஆம் ஆண்டு மக்களவைப் பொதுத் தேர்தலில் மீண்டும் திமுக கூட்டணியில் ஒரு தொகுதியில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ஈரோடு கணேசமூர்த்தி வெற்றி பெற்றார். தொடர்ந்து, திமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினராகி, நீண்ட இடைவெளிக்கு பின்னர் நாடாளுமன்றத்திற்கு சென்றார் வைகோ.

இதையடுத்து, 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் உதய சூரியன் சின்னத்தில் 6 இடங்களில் போட்டியிட்டு 4 எம்.எல்.ஏக்கள் என மதிமுகவின் அரசியல் பயணம் தொடர்கிறது. ஆரம்பத்தில் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பாளராக இருந்த வைகோ காலமாற்றத்தால், மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் வேட்பாளராக முன்மொழிந்து, தீவிர பிரச்சாரம் செய்தார். ஒரு மேடையில் பேசுகையில், ‘’திராவிட இயக்கத்தைக் காக்க திமுகவும் மதிமுகவும் இரட்டைக்குழல் துப்பாக்கியாக இருக்கும். நான் திராவிட இயக்கத்தின் போர் வாளாக இருப்பேன்’’ என்றார் வைகோ.

விலகிய தலைவர்கள்

மதிமுகவில் இருந்து முதல் அவைத் தலைவரான எல்.கணேசன் தொடங்கி, செஞ்சி ராமச்சந்திரன், கண்ணப்பன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் பல்வேறு காலகட்டங்களில் விலகினர். திமுக, அதிமுக என அவர்கள் சேர்ந்தனர், வைகோவின் உடல் நிலையைக் காரணம் காட்டி அவரது மகன் துரை வைகோ கட்சி நடவடிக்கைகளில் கவனம் செலுத்த தொடங்கினார். கடந்த 2021ம் ஆண்டு தலைமை நிலையச் செயலாளர் பதவிக்கு வந்தார். இதற்கு மாவட்டச் செயலாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி, ’’சிவகங்கை மாவட்டச் செயலாளர் புலவர் சே. செவந்தியப்பன், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் டி.ஆர்.ஆர். செங்குட்டுவன், விருதுநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.எம். சண்முகசுந்தரம் ஆகியோர் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும், தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகின்றார்கள்’’ என்று அறிவிக்கப்பட்டது.

வைகோ பதிலுக்காக காத்திருப்பு

இந்நிலையில், ’’கடந்த 30 ஆண்டுகளாக, உங்கள் உணர்ச்சிமிக்க பேச்சை நம்பி, வாழ்க்கையை இழந்த கட்சியினர், மேலும் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க, கட்சியை, தாய்க் கட்சியான திமுகவில் இணைத்து விடுவது சமகால அரசியலுக்கு சாலச்சிறந்தது” என தற்போது தெரிவித்துள்ளார் மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி. இது குறித்து துரைவைகோ கூறுகையில், ‘’சிலரின் தூண்டுதலால், குழப்பத்தை ஏற்படுத்த அவர் இப்படி தெரிவித்துள்ளார்’’ என்றார். தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்திய திருப்பூர் துரைசாமி, ‘’துரை வைகோவிற்கு பதில் சொல்ல விரும்பவில்லை. எனது நிலைப்பாடு குறித்து வைகோவிற்கு கடிதம் எழுதியுள்ளேன். அவருடைய பதிலுக்காக காத்திருக்கிறேன்’’ என்றார்.

அரசியலில் நேர்மை, பொது வாழ்வில் தூய்மை, லட்சியத்தில் உறுதி என்கிற முழக்கத்துடன் தொடங்கப்பட்ட மதிமுக பல இழப்புகளைச் சந்தித்து, நெருக்கடிகளைக் கடந்து கால் நூற்றாண்டைக் கண்டுள்ளது. காவிரி, முல்லைப்பெரியாறு, மதுவிலக்கு, ஈழத் தமிழர் பிரச்சினை… என பல போராட்டங்களை நடத்தியுள்ளது. தற்போது, கட்சியில் முக்கிய தலைவர் தூக்கியுள்ள போர்க்கொடியை எப்படி எதிர்கொள்ளப் போகிறது? என்ன செய்யப் போகிறார் வைகோ…? என்கிற கேள்வி எழுந்துள்ளது. திருப்பூர் துரைசாமிக்கு வைகோவின் பதில் என்னவாக இருக்கும். காத்திருப்போம்….

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.