“விஜயால் எந்த காலத்திலும் எம்.ஜி.ஆர்- ஆக முடியாது” – அமைச்சர் ரகுபதி பேட்டி

விஜயால் எந்த காலத்திலும் எம்.ஜி.ஆர். ஆக முடியாது என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

ஈரோடு மக்கள் சந்திப்பின்போது “திமுகவை தீயசக்தி என்றும், தவெகவை தூய சக்தி என்றும் தவெக தலைவர் விஜய் பேசியது பேசுபொருளானது. இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் வடவாளத்தில் அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் தவெக தலைவர் விஜயின் இந்த விமர்சனத்துக்கு பதிலளித்து பேசியதாவது,

“நாங்கள் தீய சக்தி இல்லை. எங்களிடம் இருப்பது மக்கள் சக்தி. விஜய்க்கு மக்கள் சக்தியைப் பற்றி தெரியாது. சினிமா வசனம் போல தீய சக்தி, தூய சக்தி என்று பேசுகிறார். மக்கள் சக்தி எங்களிடம் இருக்கிறது. விஜய்க்கு சிலப்பதிகாரமும் தெரியாது ஒன்றும் தெரியாது. எழுதிக் கொடுத்தவர்களுக்குத்தான் தெரியும்.

அவரைப் பொறுத்தவரை எந்த காலத்திலும் அவர் நினைப்பது நடக்காது. ஆறு மாதம் நடித்துவிட்டு முதலமைச்சராவது எல்லாம் சினிமாவில்தான் நடக்கும். அரசியலில் உண்மையில் நடக்காது. எம்ஜிஆரையும் விஜயையும் ஒப்பிட முடியாது. விஜயால் எந்த காலத்திலும் எம்.ஜி.ஆர். ஆக முடியாது. சினிமா பாணியில் விஜய் பேசி வருகிறார். அவர், ஐநூறு பேரை சினிமாவில் அடிப்பார். அதேபோல்தான் தரம் தாழ்ந்து பேசுகிறார். அவரைப்போல் நாங்கள் இல்லை. பாஜகவின் சி டீம்தான் விஜய்”

இவ்வாறு அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.