”வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுப்பதை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு அரசு எக்காரணம் கொண்டும் வேளாண் மண்டலங்களில் நிலக்கரி எடுப்பதை அனுமதிக்காது என்றும், இது குறித்து நாளை சட்டமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக…

தமிழ்நாடு அரசு எக்காரணம் கொண்டும் வேளாண் மண்டலங்களில் நிலக்கரி எடுப்பதை அனுமதிக்காது என்றும், இது குறித்து நாளை சட்டமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக 3 நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. என்.எல்.சி மூன்றாவது நிலக்கரி சுரங்கத்தின் பெரும்பகுதி காவிரிப் படுகையை ஒட்டியே அமைந்துள்ள நிலையில், மீதமுள்ள 6 நிலக்கரி சுரங்கங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தஞ்சை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், மொத்தம் 66 இடங்களில் ஆழ்துளையிட்டு நிலக்கரி எடுப்பதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள 11 இடங்களிலும், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்திலும் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : காவிரி டெல்டாவை அழிக்க மிகப்பெரிய சூழ்ச்சி நடக்கிறது – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

இதனிடையே, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசுக்கு அனுமதி வழங்கப்படாது என தொழில்துறை உயர் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மாநில அரசு அனுமதித்தால் மட்டுமே நிலக்கரி எடுக்க முடியும் என்றும், விவசாயிகள் பதற்றமடைய வேண்டாம் எனவும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், மத்திய அரசின் நிலக்கரி எடுக்கும் திட்டம் குறித்து கேட்டபோது, தமிழ்நாடு அரசு எக்காரணம் கொண்டும் வேளாண் மண்டலங்களில் நிலக்கரி எடுப்பதை அனுமதிக்காது என்றும், இது குறித்து நாளை சட்டமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்றும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.